இத்தாலியில் இடம்பெற்ற பகிரங்க டென்னிஸ் தொடரில் நடால் மற்றும் பிளிஸ்கோவா சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக இத்தாலியின் ரோம் நகரில் களி மண் தரையில் பகிரங்க டென்னிஸ் தொடர் கடந்த 11 ஆம் திகதி  ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. 

இதில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற அரையிறுதி ஆட்டமொன்றில் நடப்பு சாம்பியனும், டென்னிஸ் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலும், தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்ஸும் ஒருவரையொருவர் எதிர்த்தாடினர்.

இப் போட்டியில் நடால்  6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் சிட்சிபாஸ்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், நடால் ‘நம்பர் ஒன்’ இடத்திலுள்ள செர்பிய வீரான நோவக் ஜொகோவிச்சை எதிர்த்தாடினார்.

விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த ஆட்டம் 2 மணி 25 நிமிடங்கள் நீடித்தது. ஆட்டத்தின் முடிவில் நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவீச்சை வீழ்த்தி சம்பியனானார். 

ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் பட்டத்தை நடால் வெல்வது இது 34 ஆவது முறையாகும்.

இதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் செக்குடிரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா கிறீஸ் வீராங்கனையான மரியா சக்கரியை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். 

நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அவர் 42 ஆம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டா எதிர்கொண்டார். சுமார் ஒரு மணி 25 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா கோன்டாவை வீழ்த்தி சம்பியனானார்.

1978 ஆம் ஆண்டுக்கு பிறகு செக்குடியரசு வீராங்கனை ஒருவர் இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் பிளிஸ்கோவா கைப்பற்றிய 13 ஆவது சர்வதேச பட்டமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.