(இராஜதுரை ஹஷான்)

5 வருட பதவி காலம் முடிவடைந்த பின்னர் ஒரு  நாளேனும்   ஜனாதிபதியால் பதவி வகிக்க முடியாது என்பதை ஜனாதிபதி உட்பட சுதந்திர கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வருட இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் நிலைப்பாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளது . ஜனாதிபதியின் மைத்திரிபால சிறிசேன 2020.07. 21 ஆம் திகதி வரையில் ஜனாதிபதி பதவி வகிக்க முடியுமா என்று புதிய பிரதம  நீதியரசர் நியமிக்கப்பட்டதும் சட்ட  வியாக்கியானம் கோரவுள்ளதாக    சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி  ஜயசேகர கடந்த மாதம் குறிப்பிட்டார். 

கடந்த வருடம்  ஜனவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   தனது பதவிக் காலம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கமைய  ஐந்து வருடமா, அல்லது 06 வருடமா என்று நீதிமன்றத்தில்  வியாக்கியானம் கோரினார்.  

இதற்கு 05 நீதியரசர்கள்  அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியின் பதவி காலம் 05 வருடங்கள் என்று   தீர்ப்பு வழங்கினார்கள். ஆனால் மீண்டும் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில்  சுதந்திர கட்சியினர் பிரச்சினைகளை ஏற்படுத்தி நீதிமன்றத்தை நாடுவார்களாயின் அதனையும் முழுமையான  எதிர்க் கொள்ள தயார்.