(நா.தனுஜா)

மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் எவ்வித அக்கறையுமில்லாத இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியிலிருக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் முன்கூட்டியே தடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் அரசாங்கத்திடம் இருந்தும் கூட, அரசாங்கத்தின் கவனயீனம், அசமந்தப்போக்கு என்பவற்றினால் இந்தத் தாக்குதல் நடைபெற்றுப் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. 

ஆகவே தாக்குதலைத் திட்டமிட்ட பயங்கரவாதிகள் குற்றவாளிகள் என்று கருதப்படும் அதேவேளை, தாக்குதல் குறித்து அறிந்திருந்தும் அதனைத் தடுக்காத அரசாங்கமும் குற்றவாளியாகவே கருதப்பட வேண்டும்.

எனவேதான் பாராளுமன்றத்திற்குக் காணப்படும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தைப் பதவியிறக்குவதற்கு இந்த ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளைய தினம் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.