நாட்டில் பாரிய பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­திய மக்­களின் உயிர்­க­ளுக்கும் உடை­மை­க­ளுக்கும் இழப்­பு­களைக் கொடுத்த 30 வரு­ட­கால யுத்தம் நிறை­வ­டைந்து  10 வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலை­யில் அதனால் பாதிக்­கப்­பட்ட அப்­பாவிப் பொது­மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்­டுள்­ள­னவா என்று பார்த்தால் அது விடை கிடைக்­காத ஒரு கேள்­வி­யா­கவே இருக்கும். காரணம் கடந்த 10 வரு­டங்­க­ளாக பாதிக்­கப்­பட்ட மக்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவே இருக்­கி­­ன்­றனர். அவர்­களின் பிரச்­சி­னை­களும் இன்னும் பிரச்­சி­னை­க­ளா­கவே நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அர­சியல் தீர்வு, காணாமல் போனோர் விவ­காரம், அர­சியல் கைதிகள், கண­வனை இழந்த பெண்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள், பொறுப்புக் கூறல் விடயம், இழப்­பீடு தாமதம் உள்­ளிட்ட அனைத்து பிரச்­சி­னை­களும் இது­வரை தீர்க்­கப்­ப­டா­ம­லேயே காணப்­ப­டு­கின்­றன. 

இலங்­கைக்கு சுதந்­திரம் கிடைத்­த­தி­லி­ருந்து இந்த நாட்டின் தமிழ் மக்கள் தமக்­கான அர­சியல் உரி­மை­களை கோரி போராடி வந்­தி­ருக்­கின்­றனர். எனினும் இந்தக் கோரிக்­கைகள் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரால் மறுக்­கப்­பட்­டது மட்­டு­மன்றி அவை கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வு­மில்லை. இந்த நிலை­யி­லேயே அர­சியல் அபி­லா­ஷைகள் தொடர்­பான உரி­மை­களை கோரிய தமிழ் மக்­களின் போராட்­டம் ஒரு கட்­டத்தில் வேறொரு பரி­ணா­மத்தை அடைந்­தது. அத­ன­டிப்­ப­டையில் இந்த நாட்டில் 30 வரு­ட­கால சிவில் யுத்தம் இடம்­பெற்­றது. 

யுத்த காலத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் காணும் நோக்கில் பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. எனினும் அந்த முயற்­சிகள் அனைத்தும் இது­வரை வெற்­றி­பெ­ற­வில்லை. தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை  உறுதிப்­ப­டுத்­து­கின்ற அர­சியல் தீர்­வொன்றைக் கோரிேய போராட்­டங்கள் இடம்­பெற்­றன. ஒரு கட்­டத்தில் இந்­தி­யாவின் தலை­யீட்­டுடன் .இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு என்ற பெயரில் 13ஆவது திருத்தச் சட்டம் ஊடாக மாகாண சபை­கள்­ முறை கொண்­டு­வ­ரப்­பட்­ட­போ­திலும் அத­னூ­டாக தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்­பதே உண்­மை­யாகும்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே இந்த நாட்டில் 30 வரு­ட­கால யுத்தம் நடை­பெற்­றது. பல்­வேறு வலிகள், வடுக்கள், இழப்­பு­க­ளுக்கு மத்­தியில் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்­தம் முடி­வுக்கு வந்­தது. இப்­போது இங்கு எழும் கேள்­வி­யா­னது யுத்­தம் முடிவ­டைந்து 10 வரு­டங்கள் கடந்­து­விட்­டன. இந்த 10 வருட காலத்தில் இந்த யுத்­தம் ஏற்­ப­டு­வ­தற்­கான காரணம் குறித்து ஆரா­யப்­பட்­டதா அல்­லது யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பாதிப்­புகள் இது­வரை ஆரா­யப்­பட்டு கவ­னத்தில் கொள்­ளப்­பட்­ட­னவா என்­ப­தாகும். 

இந்த இரண்டு விட­யங்­க­ளுக்கும் இது­வரை தமிழ் மக்கள் மகிழ்ச்­சி­ய­டை­யக்­கூ­டி­ய­தான பதில்கள் கிடைக்­க­வில்லை என்­பது யதார்த்­த­மாகும். தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­வ­தற்­கான ஒரு தீர்வுத் திட்­டத்தை எதிர்­பார்த்தே இந்த போராட்­டங்கள் இடம்­பெற்­ற­போ­திலும் யுத்தம் முடி­வ­டைந்து 10 வரு­டங்கள் கடந்­து­விட்­ட­போதிலும் அவ்­வாறு ஒரு தீர்வுத் திட்­டத்­துக்­கான முய­ற்­சிகள் சரி­யான முறையில் இடம்­பெ­ற­வில்லை. 

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததும் 2010ஆம் ஆண்டு ஏன் இந்த யுத்தம் நடை­பெற்­றது என்­பது குறித்து ஆராய கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் என்ற பேரில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்த ஆணைக்­குழு நாடு முழு­வதும் அமர்­வு­களை நடத்தி மக்­க­ளிடம் சாட்­சி­யங்­களைப் பெற்று இறுதியில் தமது பரிந்­து­ரைகள் அடங்­கிய அறிக்­கையை அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பித்­தது. எனினும் அதில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த பரிந்­து­ரைகள் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­பட­வில்லை. அதன் பின்னர் 2011ஆம் ஆண்­ட­ளவில் தீர்வுத் திட்டம் தொடர்பில் ஆராய அப்­போ­தைய மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அத­னூ­டா­கவும் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை.

இந்தப் பிரச்­சினை இழுத்­த­டித்­துக்­கொண்டே செல்­லப்­பட்­டது. இதற்­கி­டையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான கோரிக்­கை­களும் முன்­வைக்­கப்­பட்­டன. இதற்­காக ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் பிரே­ர­ணை­களும் நிறை­வேற்­றப்­பட்­டன. எனினும் எந்­த ஒரு முயற்­சி­யி­னூ­டா­கவும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­க­வில்லை. எப்­ப­டி­யி­ருப்­பினும் 2015ஆம் ஆண்டு உரு­வாக்­கிய அர­சாங்­கத்தின் மீது தமிழ் பேசும் மக்கள் பாரிய நம்­பிக்கையை வைத்­தி­ருந்­தனர். 

அதா­வது புதிய அர­சாங்­கத்­தி­னூ­டாக நிலு­வையில் இருக்கின்ற தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்கை மக்­க­ளுக்கு காணப்­பட்­டது. எனினும் கடந்த 4 வரு­டங்­களின் நிலை­மையை எடுத்துப் பார்க்­கும்­போது பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­களோ தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­களோ உரிய முறையில் தீர்க்­க­ப்­படா­ம­லேயே உள்­ளன. இந்த அர­சாங்­கத்தில் அர­சியல் தீர்வைக் காணும் நோக்கில் சில முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன. புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு  பேர­வை­யாக மாற்­றப்­பட்டு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. ஆனால் அந்த முயற்சி தற்­போது இடை ­ந­டுவில் கைவி­டப்­பட்டு ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளது. அதே­போன்று காணாமல் போனோர் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­காக காணாமல் போனோர் குறித்து ஆராய அலு­வ­லகம் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அலு­வ­லகம் தற்­போது இயங்­கி­வ­ரு­கின்ற போதிலும் இது­வரை காணாமல் போனோரின் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­க­வில்லை.

அர­சியல் கைதிகள் விவ­கா­ரமும் இது­வரை தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­யா­கவே நீடித்து வரு­கி­றது. மேலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இழப்­பீ­டு­களை வழங்­கு­வ­தற்­கான செயற்­பா­டு­களை ஒருங்­கி­ணைப்­ப­தற்­காக இழப்­பீட்டு அலு­வ­லகம் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அலு­வ­லகம் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. எனினும் இது­வரை மக்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொண்டு தமது வாழ்­வா­தா­ரத்தை கொண்டு நடத்­து­கின்­றனர். வடக்கு கிழக்கில் யுத்­தத்­தினால் கண­வனை இழந்து குடும்­பத்­த­லை­வி­க­ளாக இருக்கும் பெண்கள் தமது குடும்­பங்­களை கொண்டு நடத்­தவும் வாழ்க்­கையைக் கொண்டு நடத்­தவும் பல இன்­னல்­க­ளையும் நெருக்­க­டி­க­ளையும்  எதிர்­கொண்டு வரு­கின்­றனர். பலர் தமது அன்­றாட வாழ்க்­கையை கொண்­டு­ந­டத்­து­வ­தற்கே திண்­டாடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். 

அதே­போன்று புனர்­வாழ்வு பெற்ற முன்னாள் போரா­ளி­களும் தமது வாழ்க்­கையை கொண­டு­ந­டத்­து­வதில் பிரச்­சி­னையை எதிர்­கொண்­டுள்­ளனர். ஒரு­சிலர் சுய­தொ­ழில்­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­ற­போ­திலும் பலர் பொரு­ளா­தார ரீதி­யான பல நெருக்­க­டி­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். இந்­த­வ­கையில் கடந்து போன 10 வரு­டங்­களை நாம் நோக்­கும்­போது பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை என்­பதை காண முடி­கின்­றது. பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு கடந்த 10 வருட காலத்தில் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டாலும் அவை வெற்­றி­பெ­ற­வில்லை என்­பதே உண்­மை­யாகும். பிரச்­சி­னைகள் பிரச்­சி­னை­க­ளா­கவே நீடிக்­கின்­றன. பாதிக்­கப்­பட்ட மக்கள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளா­கவே இருக்­கின்­ற­னர். அர­சியல் தீர்வு விட­யமும் எட்­டாக்­க­னி­யா­கவே நீடிக்­கின்­றது. 

இந்­நி­லையில் இந்த அனைத்­து  பிரச்­சி­னை­க­ளுக்கும் விரைவில் தீர்வைக் காண்­ப­தற்கு அர­சியல் தலை­மைத்­து­வங்கள் இத­ய­சுத்­தி­யுடன் செய­ற்பட­வேண்டும். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­துடன் அந்த மக்கள் நீண்­ட­கா­ல­மாக கோரி வரு­கின்ற அரசியல் தீர்வுத் திட்டத்தைக் காண்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த செயற்பாடுகள் இதயசுத்தியுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை மனதில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும். 

ஏற்கனவே பாரியளவில் தாமதிக்கப்பட்டு விட்டது. தொடர்ந்தும் இந்த விடயங்களை தாமதித்து மக்களுக்கான நீதியை மறுக்கும் நிலைமைக்கு சென்றுவிடக்கூடாது. 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாடு மீண்டும் ஒரு இக்கட்டான நிலைமைக்கு வந்திருக்கிறது என்பது உண்மையாகும். எதிர்பாராத பல நெருக்கடிகளை நாடு சந்தித்திருக்கிறது. அந்தப் பிரச்சினைகளின் ஆழத்தையும் தாற்பரியத்தையும் தமிழ் பேசும் மக்கள் உணர்ந்திருக்­கின்றனர். எனினும் அதற்காக அவர்களின் நீண்டகால பிரச்சினை­களை தீர்க்காமல் இழுத்தடிப்பது முறையானது அல்ல என்பதை புரிந்து அரசியல் தலைவர்கள் செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.