நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்தவாறு நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெரியகல்லாறு கடல்நாச்சி அம்மன் ஆலயத்திற்கு எதிரேவுள்ள நீரோடையில் நேற்று இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

செல்பி எடுத்தவாறு நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இந்த இளைஞன் சிறிது நேரத்தில் சேற்றில் சிக்குண்டு அதிலிருந்து வெளியேற முடியாமல் நீருக்குள் மூழ்கியுள்ளார்.

நீண்ட நேர தேடுதலின் பின்னர் நீரோடையின் சேற்றிலிருந்து மீட்கப்பட்ட அவரை  கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தபோதும் அங்கு அவரைக் காப்பாற்ற முடியாமல் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.