(ப.பன்னீர்செல்வம்)

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வடக்கு முதல்வர்  விக்னேஸ்வரன் ஆகியோர் எதைச் சொன்னாலும் நாம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை. வட, கிழக்கு பிரச்சினைக்கு ஒற்றையாட்சி மூலமே தீர்வு காணப்படும் என்று கல்வி அமைச்சரும் ஐ.தே.கட்சியின் தேசிய தொழிலாளர் சங்கத் தலைவருமான அகிலவிராஜ் காரியவசம்  தெரிவித்தார். 

ஊடக ஒழுக்க விழுமியங்களை பாதுகாக்கவே சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. மாறாக ஊடகங்களை அடக்குமுறைக்குள்ளாக்குவதற்கு அல்ல  என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

பிட்ட கோட்டேயிலுள்ள ஐ.தே.கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகைியலேயே    அமைச்சர் அகிலவிராஜ் காரியவம் இதனைத் தெரிவித்தார். 

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

  எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இராணுவ முகாமுக்கு சென்ற விவகாரம் . வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட  சமஷ்டி முறை, வட கிழக்கு இணைப்பு தொடர்பான பிரேரணை நிறைவேற்றம், முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பாக அவசர அவசரமாக முடிவுகளை எடுக்க முடியாது. 

அவசரப்பட்டால் அரசின் தேசிய நல்லிணக்கத்திற்கான முயற்சிகள்,  அமைதியான சூழல் அனைத்தும் குழம்பிப்போய்விடும். எனவே மிகவும் அவதானமாக தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதைவிடுத்து தம்மை தேசிய பற்றாளர்களாகவும் சிங்கள பெளத்த பாதுகாப்பாளர்களாகவும் காட்டிக் கொண்டு நாட்டில் இனவாதத்தையும் அடிப்படை வாதத்தையும் ஊக்குவிக்கும்  தீய சக்திகளின் தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் அவசரப்பட்டு எத் தீர்மானத்தையும் எடுக்க அரசு தயாரில்லை.