(எம்.எப்.எம்.பஸீர்)

வடமேல் மாகாணத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற வன்முறைகளின் போது, குருணாகல் மாவட்டத்தில் சுற்றித்திருந்ததாக கூறப்படும் சந்தேகத்துக்கிடமான மூன்று டிபென்டர் வண்டிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைக் குழுக்களின் விசாரணைகளிலேயே இந்த டிபென்டர் வண்டிகள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த வன்முறைகள் குறித்து பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு தெற்குக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சில்வாவின் கீழ் இடம்பெறும் விசாரணைகளில், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் நேற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.  

அதன்படி மூன்றரை மணி நேர வாக்கு மூலமொன்று தயாசிறி ஜயசேகரவினால்  வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் உன்மைத் தன்மை குறித்து உறுதி செய்ய சிறப்பு பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்கள் உறுதி செய்தன.