(எம்.ஆர்.எம்.வஸீம்)

முஸ்லிம் மக்களுக்கெதிராக  இனவாதிகளால் தொடரப்படும்  வன்முறைகளை தடுப்பதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த  இரண்டு அரசாங்கங்களும்  தவறியிருக்கின்றன.  

நல்லாட்சி  அரசாங்கம் கூட முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை காட்டவில்லை என்ற நிலைப்பாட்டிலே முஸ்லிம்கள் இருக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சி பொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் மக்களுக்கு எதிராக  திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத தாக்குதல்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள  அறிக்கையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த  21ஆம் திகதி, முஸ்லிம் என்ற பெயர் தாங்கிய குழுவொன்று  வெளிநாட்டு கூலிப்படையொன்றான ஐ.எஸ். ஐ.எஸ். என்ற கொலைவெறி அமைப்போடு இணைந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. இந்த பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து தெற்கின் இனவாத சக்திகள் முஸ்லிம்களுக்கெதிராக தனது வழமையான  இனவாத பிரசாரங்களை மிக வேகமாகவும், உற்சாகத்துடனும்  முன்னெடுத்திருக்கின்றன. 

இதன் விளைவாகவே கடந்த 13ஆம் திகதி  நாட்டின் சில பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக  திட்டமிட்ட இனவாத தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது.  கடந்த காலங்களிலும் முஸ்லிம்கள் மீது இத்தகைய தாக்குதல்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய இனவாதத் தாக்குதல்கள்  இந்நாட்டை ஆட்சி செய்த மற்றும் ஆட்சி  செய்து கொண்டிருக்கும் இரண்டு அரசாங்கங்களின்  காலங்களிலும் இடம்பெற்றுள்ளன. இந்த நல்லாட்சியிலும் இத்தகைய இனவாத தாக்குதல்கள் தொடர்கதையாக நிகழ்ந்து கொண்டிருப்பது வேதனை தரும் விடயமாகும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.