இத்தாலியில் நடைபெற்று வரும் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஆட்டத்தில் ரபெல் நடால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்று வரும் இத் தொடரில் 18 ஆம் திகதி இடம்பெற்ற அரையிறுதி ஆட்டமொன்றில் நடப்பு சாம்பியனும், டென்னிஸ் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலும், தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்ஸும் ஒருவரையொருவர் எதிர்த்தாடினர்.

இப் போட்டியில் நடால் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் சிட்சிபாஸ்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இந்த ஆண்டில் களிமண் தரை போட்டியில் நடால் இறுதிப்போட்டிக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும். 

இதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 42 ஆம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டா  5-7, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 4 ஆவது இடத்தில் உள்ள நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.