இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் நடைபெற்று முடிந்த நான்காவது போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஒரு இருபதுக்கு - 20, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இடம்பெற்று வருகிறது.

இதில் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று, இருபதுக்கு 20 தொடரை தனதாக்கியது.

கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 11 ஆம் திகதி இடம்பெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ஓட்டங்களினாலும், 17 ஆம் திகதி இடம்பெற்ற நான்காவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் நிர்ணயித்த இமாலய இலக்கினை இங்கிலாந்து அணி துரத்தியடித்து தொடரில் 5:2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இந் நிலையில் கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நோட்டிங்கமில் ஆரம்பமான நான்காவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியல் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 340 ஓட்டங்களை குவித்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அஸாம் 115 ஓட்டத்தையும், மொஹமட் ஹபீஸ் 59 ஓட்டத்தையும்,  பஹர் ஜமான் 57 ஓட்டத்தையும் மலீக் 41 ஓட்டத்தையும் அதிகபடியாக எடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய டொம் குர்ரன் 4 விக்கெட்டுக்களையும், மார்க்வுட் 2 விக்கெட்டுக்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

341 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த, இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து பாகிஸ்தான் நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது. 

இங்கிலாந்து அணி சார்பில் 8 ஆவது சதத்தை பூர்த்தி செய்த தொடக்க ஆட்டக்காரரான ஜோசன் ரோய் 89 பந்துகளை எதிர்கொண்டு, 11 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்களாக 114 ஓட்டங்களையும், ஜேம்ஸ் வின்ஸ் 43 ஓட்டத்தையும் எடுத்து நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர். எனினும் அடுத்தடுத்து வந்த ரூட் 36 ஓட்டத்துடனும், பட்லர் மற்றும் மொய்ன் அலி டக்கவுட் முறையிலும், டொம் குர்ரன் 31 ஓட்டத்துடனும் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர். 

எனினும் 4 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் இறுதிவரை வரை நிலைத்து நின்று 64 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டம் அடங்களாக 71 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் இமாத் வாசிம், மொஹமட் ஹஸ்னைன் தலா 2 விக்கெட்டுக்களையும், ஜூனைத் கான், ஹசன் அலி, சோயிப் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான இறுதியும், ஐந்தாவதுமான ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. 

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி சற்றுமுன்னர் வரை 15 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 118 ஓட்டங்களை குவித்துள்ளது.