அயர்லாந்து, மே.இ.தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இடம்பெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்களாதேஷ் அணி சம்பியன் ஆகியுள்ளது. 

கடந்த 5 ஆம் திகதி அயர்லாந்தின், டப்ளினில் ஆரம்பமான இத் தொடரின் இறுதிப் போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தகுதி பெற்றன.

அதன்படி இறுதிப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை டப்ளினில் நடைபெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 24 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 152 ஓட்டங்களை எடுத்தது. 

இதன் பின்னர் போட்டியில் மழை குறுக்கிட்டதனால் போட்டி இடை நிறுத்தப்பட்டது. ஷேய் ஹோப் 74 ஓட்டத்துடன் ஆட்டமிழந்ததுடன், சுனில் அம்ரஸ் 69 ஓட்டத்துடனும், பிராவோ 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதையடுத்து பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 24 ஓவர்களில் 210 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

210 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது, சம்பியனானது. 

பங்களாதேஷ் அணி சார்பில் தமீம் இக்பால் 18 ஓட்டத்துடனும், செளமிய சர்க்கார் 66 ஓட்டத்துடனும், சபீர் ரஹ்மான் டக்கவுட் முறையிலும், முஷ்பிகுர் ரஹும் 36 ஓட்டத்துடனம், மொஹமட் மிதூன் 17 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், மாமதுல்லா 19 ஓட்டத்துடனும், ஹுசேன் 52 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கப்ரீல் மற்றும் ரேமோன் ரீபர்  ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஃபேபியன் ஆலன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஹூசேனும், தொடரின் ஆட்ட நாயகனாக ஷேய் ஹோப்ஸும் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த தொடரில்  மேற்கிந்தியத்தீவுகள் அணி, பங்களாதேஷுக்கு எதிரான 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.