சண்டே டைம்ஸ்

"யானைகள் மோதலில் ஈடுபடும்போது அதன் அடியில் சிக்கி இறப்பது எறும்புகளே என்பது ஆபிரிக்க பழமொழி." பலம் வாய்ந்த நாடுகள் ஆதிக்கத்திற்காக மோதிக்கொள்ளும்போது சிறிய நாடுகள் எப்படி பலவீனமானதாக விளங்குகின்றன என்பதை இந்த பழமொழி தெரிவிக்கின்றது.

இலங்கையின் இன்றைய நிலையும் இதுதான்.

பலம வாய்ந்த நாடுகளின் அதிகாரபோட்டியில் மற்றொரு அத்தியாயத்தை சேர்த்துவிட்டு  இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியாழக்கிழமை நாடு திரும்பினார். அவரது ஊடக பிரிவு சீனாவுடன் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன என தெரிவித்தது.

சிறிசேனவின் பயணத்திற்கான காரணங்களும் இடம்பெற்ற விடயங்களும் சுவாரஸ்யமானவை. ஆசிய நாகரீகங்கள் குறித்த கலந்துரையாடலிற்கு சீனாவிற்கு வருமாறு பெப்ரவரியிலேயே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவர் அதனை ஏற்றுக்கொண்ட போதிலும் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்வது குறித்து உறுதிமொழிகளை வழங்கவில்லை. உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து இலங்கைக்கான சீனா தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவசரமாக சந்தித்தார்.

அந்த சந்திப்பில் அமெரிக்கா பிரிட்டன் உட்பட பல நாடுகளின் புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு தரப்பினரும் இலங்கையில் நிலை கொண்டிருப்பது குறித்த தனது கவலையை அவர் வெளியிட்டார்.

சீனா இலங்கையில் தனது முதலீடுகளின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என அவர்  குறிப்பிட்டார். இந்த சந்திப்புகளிற்கு இரண்டு நாட்களிற்கு பின்னர் தூதுவர் மீண்டும் சிறிசேனவை சந்தித்தார்.

இம்முறை அவர் சீனா ஜனாதிபதியின் செய்தியொன்றை சிறிசேனவிடம் கையளித்தார். அந்த செய்தியில் சீனா ஜனாதிபதி சிறிசேனவை சீனாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்

இதனை சிறிசேன ஏற்றுக்கொண்டார். சீனாவிடம் 50 ஜீப்புகளை கோருவது என்ற எண்ணத்துடனேயே சிறிசேன அந்த நாட்டிற்கு சென்றார்,ஆனால் அங்கு 100 ஜீப்களை கோரியிருந்தார்.

சீனா ஜனாதிபதி ஆம் என தெரிவித்தார். இலங்கை படையினருக்காக 2600 மில்லியனை வழங்க இணங்கிய அவர் இலங்கை பொலிஸாருக்கு 1500 மில்லியன் பெறுமதியான உபகரணங்களை வழங்குவதற்கு இணங்கினார்.

இன்னும் சிறிது நாட்களில் சிறிசேன சீனாவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த விபரங்கள் வெளியாகிவிடும்.

இதில் ஒரு உடன்படிக்கை விசேடமாக பாதுகாப்பு தொடர்பானது என்ற தகவல் சண்டே டைம்ஸிற்கு கிடைத்துள்ளது.

இலங்கையில் மேற்குநாடுகளின் இராணுவ செயற்பாடுகள் அதிகரித்து வருவதே- குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள்- இலங்கை ஜனாதிபதியை சீனாவிற்கு வருமாறு சீனா ஜனாதிபதி அழைத்தமைக்கான காரணம் என்பது தெளிவாகியுள்ளது.

- ஏ.ரஜீபன் -