(எம்.மனோசித்ரா)

கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் சீதுவை பகுதியில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டையிழந்து எதிர்த்திசையில் வந்த கனரக வாகனமொன்றுடன் மோதியதானாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி நீர்கொழும்பு வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்த நபர் 21 வயதுடைய, எலகந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொடகமவிலிருந்து கடவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் கட்டுப்பாட்டையிழந்து அருகிலுள்ள கால்வாயொன்றில் வீழ்ந்துள்ளது. கால்வாயிலிருந்து மீண்டும் வீதிக்கு வேனை திருப்பும் போது பின்னால் வந்துகொண்டிருந்த லொறி வேனுடன் மோதியுள்ளது. 

வேன் சாரதி உள்ளிட்ட ஐவரும், லொறி சாரதி உள்ளிட்ட அதில் பயணித்த நால்வரும் காயமடைந்த நிலையில் நாகொட மற்றும் எல்பிட்டிய ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் போது படுகாயமடைந்திருந்த வேன் சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய குருந்துவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எல்பிடிய பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.