தாய்லாந்தில் 15 வயது தாயால் புதைக்கப்பட்ட குழந்தையை நாய் காப்பாற்றிய அதிசய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொலிஸார் சனிக்கிழமை தெரிவித்ததாவது, ரட்சசீமா மாகாணம், சம்பூவாங் மாவட்டத்திலுள்ள பண்ணையொன்றில், தனக்கு முறை தவறி பிறந்த ஆண் குழந்தையை 15 வயது பெண் குப்பைக் குழிக்குள் புதைத்துச் சென்றுள்ளார். எனினும், அந்த வழியாக வந்த "பிங் பாங்' என்ற நாய், குழந்தை புதையுண்டிருப்பதை தனது மோப்ப சக்தி மூலம் கண்டறிந்துள்ளது. உடனடியாக குழந்தை இருந்த பகுதியை சுற்றிலும் குப்பைக் குழியைத் தோண்டி எடுத்தவாறே அந்த நாய் பலமாகக் குரைத்தது.

இதனால் எச்சரிக்கையடைந்த அந்த நாயின் உரிமையாளரும், அந்தப் பகுதியில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தவர்களும் புதையுண்டிருந்த குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

தற்போது அந்தக் குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதன் உடல் நிலை சீராக உள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர். அந்தக் குழந்தையை ரகசியமாகப் பெற்றெடுத்த சிறுமி, அதனை பெற்றோரிடமிருந்து மறைப்பதற்காக குழந்தையை குப்பையில் புதைத்துவிட்டு சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது. தற்போது அந்தச் சிறுமி கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை முயற்சி மற்றும் பெற்ற குழந்தையை கைவிட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரவித்துள்ளனர்.