பொருளாதாரத்தை அடியோடு இல்லாதொழிக்கவே தாக்குதல் ; அரச பயங்கரவாதம் தலைதூக்குமோ என அச்சம் - பாதிக்கப்பட்டவர்கள் அங்கலாய்ப்பு

Published By: Priyatharshan

19 May, 2019 | 09:40 AM
image

( களத்திலிருந்து எம்.டி. லூசியஸ், வீ.பிரியதர்சன் )

இரத்தக்கறை படிந்த மரண வேதனைகள் நிறைந்த அந்த '21 ஆம் திகதி" இன்னும் நினைவில் இருந்து நீங்கவில்லை.  பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் புதையுண்ட இடங்களில் இன்னும் புற்கள் கூட முளைக்கவில்லை.

அதற்குள் இனவாதம், மதவாதம், துவேஷம், வன்முறைகள் என நாடே அதாளபாதாளத்துக்குள் சென்றுக்கொண்டிருக்கின்றது.

உயிர்த்த யேசுவின் பெருநாள் அன்று பல அப்பாவிகள் கொல்லப்பட்டாலும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஒவ்வொரு சொல்லுக்கும் கட்டுப்பட்டு கிறிஸ்த்தவர்கள் அமைதி காத்து வந்தார்கள். 

கழுகு போன்று சமயம் பார்த்துக்கொண்டிருந்த சில காடையர் குழுக்கள் இந்த சம்பவத்தை தமக்கு சாதமாக்கிக்கொண்டு இனங்களுக்கு இடையே குரோதத்தை வளர்த்து வன்முறைகளை தூண்டுவித்து அரசியல் இலாபம் தேட முயற்சித்துள்ளன.

இதற்கு அப்பால், குறித்த காடையர்களால் கடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து கொடூர தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

' எமது பொருளாதாரத்தை அடியோடு இல்லாதொழிக்கவே திட்டமிட்டு எம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" என பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அப்பாவி முஸ்லிம்களின் ஆதங்கமும் இதுவாகவே இருக்கின்றது.

நீர்கொழும்பு, சிலாபம் எனத் தொடங்கிய வன்முறைகள், குருநாகல் மாவட்டத்தின் பல முஸ்லிம் பிரதேசங்களிலும் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொட பகுதியிலும் கோரத் தாண்டவமாடப்பட்டுள்ளதை நேரில் சென்ற எம்மால் அவதானிக்க முடிந்தது.

உயிர் பலி

பள்ளிவாசல்கள், கடைகள், வீடுகள், வாகனங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்த வன்முறை தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதில் நீர்கொழும்பில் அப்பாவி முஸ்லிம் தந்தை ஒருவரின் உயிரும் பறிபோயிருந்து.

வீரகேசரி குழுவினர் விஜயம்

மினுவாங்கொடை நகருக்கு செல்லும் வீதியில் காடையர் குழுக்களினால் அரங்கேற்றப்பட்டிருந்த அட்டகாசங்களை அவதானித்துக்கொண்டே சென்று கொண்டிருந்தோம். வீதிகள் தோறும் பாரிய கற்கள், பொல்லுகள், கண்ணாடித்துகள்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

முற்றாக எரிந்து சாம்பராகிய தாக்குதல் வடுக்களைக்கொண்ட வர்த்தக நிலையங்களுக்கு பாதுகாப்புக்காக முழத்துக்கு முழம் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் தரித்து நின்றனர். 

ஒவ்வொரு கடைகளும் வீடுகளும் தாக்குதலின் கொடூரத்தை சுமந்து நிறக்கின்றன. ஆங்காங்கே கடைகள் எரிந்தும் எரியாமலும் புகைத்துக்கொண்டிருந்தன. இந்தக்காட்சி சற்று எமக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

திடீரென படைவீரர் ஒருவர் 'எங்கே போகின்றீர்கள் என சற்று கடும் தொனியில் எம்மிடம் கேட்டார். எமது அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னும் கடைகள் கடுமையாக சேதமாக்கப்பட்டிருந்த பகுதிக்கு அவர் எம்மை அனுமதிக்கவில்லை.

இதன் பின்னர் வன்முறை நிகழ்ந்தேறி தாக்குதலுக்கு இலக்காகியிருந்த பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம். பள்ளிவாசல் முற்றாக சேதமாக்கப்பட்டிருந்தது. வாயில் கதவுகள் கண்ணாடி யன்னல்கள் அடித்து நொருக்கப்பட்டிருந்தன.

பள்ளிவாசல்களுக்குள் அதிகளவு ஆண்கள் நின்று கொண்டிருந்தனர். அனைவர் முகத்திலும் கோபம். அங்கும் இங்குமாக குழுக்கள் குழுக்களாகக்கூடி ஆதங்கமாககதைத்து கொண்டிருந்தார்கள்.

பள்ளிவாசலினுள் இருந்த கல்லொழுவை பள்ளிவாசலைச் சேர்ந்த 35 வயதுடைய சப்றி மௌவி எம்முடன் பேசத்தொடங்கினார். அவரொரு சமூக செயற்பாட்டாளர். அனைத்தின, மத செயற்பாடுகளில் பாரபட்சமின்றி கலந்துகொள்ளும் மனிதர்.

படையினரின் உதவியுடனேயே தாக்குதல்

இராணுவ பாதுகாப்பும் பொலிஸ் பாதுகாப்பும் இருக்கும் போதே எமது சொத்துக்கள் மீது சேதம் விளைவிக்கப்பட்டன. அவர்களின் பாதுகாப்புக்கு மத்தியிலேயே அனைத்தும் அரங்கேற்றப்பட்டன.

நோன்பு திறப்பதற்கு ஆயத்தமாக இருந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் மாலை 5.15 மணியளவில் வந்த கும்பலொன்று சரமாரியாக தாக்கத் தொடங்கினார்கள். இதன் பின்னர் இரவு 7 மணியளவில் வன்முறைகள் உக்கிரமடைந்தன. இதன் போதும் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் மேற்கொண்டவர்களைத் தடுக்கவில்லை.

7.15 மணியளவில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. எமது கடைகளுக்கு பாதுகாப்பாக நாம் இருந்த போதும் படையினர் எம்மைத் தகாத வார்த்தைகளினால் திட்டி விரட்டியடித்தனர்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னரே கடைகளுக்கு தீவைப்பு

 

ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரும் முன்னர் சில கடைகள் சேதமாக்கப்படவில்லை. ஊரடங்குச் சட்டத்தின் பின்னர் மினுவாங்கொடை நகர் பகுதியில் படையினர் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர்.

இதன் பின்னரே அங்கு வந்த கும்பல் படையினரின் கண்ணெதிரே எமது கடைகளுக்கு தீவைத்ததைக் கண்டோம். அந்தக் கணொளியை அவர் எம்மிடம் காண்பித்தார். அவர் கூறியது போன்று வர்த்தக நிலையங்களுக்கு காடையர் குழு தீவைப்பதை எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மீண்டும் எம்முடன் பேசிய அவர்,

முதன்முலாவதாக எமது பிரதேசத்திலுள்ள விமான நிலைய வீதியிலுள்ள பிரபலமானதும் பெரிய ஹோட்டலான பௌசுல் ஹோட்டலை தாக்கித் தகர்த்தனர்.

அந்தக் ஹோட்டல் மிகவும் பிரபலமானது. 24 மணித்தியாலமும் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. ஒரு நேரத்தில் 300 மற்றும் 400 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக உணவருந்தலாம். ஒரு செல்வாக்கு நிறைந்த இடத்தையே தரை மட்டமாக்கிவிட்டார்கள். 

இந்த இடத்திலும் படையினர் விடுப்பு பார்த்துக்கொண்டே இருந்தனர். காடையர் குழு இந்த இடத்திலிருந்தே மினுவாங்கொடை நகர் மீது நகர்ந்தது. அவர்களின் பின்னே படையினரும் தொடர்ந்து அங்கு வந்தனர்.

இந்த நேரத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால் எமக்கு அங்கு செல்ல முடியவில்லை. ஆனால் அந்த காடையர் குழு தமது விருப்பத்தின் போல் செயற்பட விட்டு விட்டு படையினர் வேடிக்கைபார்த்துக் கொண்டு இருந்தனர்.

அரைக்காற்சட்டை அணிந்து கொண்டு பொல்லுகள் தடிகளுடன் மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வாகனங்களில் வந்து இறங்கினர்.

அந்த காடையர் குழுவுக்கு உள்ளூர் பெரும் பான்மையினத்தவர்களும் வழிகாட்டலுடனேயே இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. மினுவாங்கொடை நகரத்தின் சந்தைத் தொகுதியில் பெரும்பான்மை இனத்தவர்களுடன் இணைந்த முஸ்லிம் சில்லறை வியாபார நிலையங்கள் கலந்து காணப்படுகின்றன.

வெளிப் பிரதேசத்தில் இருந்து வந்த காடையர் கும்பலுக்கு எவ்வாறு முஸ்லிம்களின் கடைகளை மாத்திரம் இனம் காணமுடியும். அந்தக் கும்பலுக்கு எமது பிரதேசத்தவர்களே வழிகாட்டிகளாக இந்துள்ளமை வெளிப்படையாகத் தெரிகின்றது.

எமது முஸ்லிம் மக்களின் சுமார் 20 க்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சிறிதுசிறிதாக சேர்த்து கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி அல்லாஹ்வின் ஆசீர்வாதத்தால் சேர்த்த அனைத்து சொத்துக்களும் இன்று சாம்பராகிவிட்டன. இதற்கு யார் பொறுப்புக் கூறுவார்கள். எம்மை இலக்கு வைப்பார்கள் என்று நாம் ஒருபோதம் நினைக்கவில்லை.

சுமார் 40 கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத் தரப்பின்  ஒத்துழைப்புடனேயே அனைத்தும் அரங்கேற்றப்பட்டன. பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தும் போது குறிப்பிட்ட சிலர் தொழுதுகொண்டு இருந்தனர். அல்லாஹ்வின் உதவியால் அவர்கள் தாக்குதலுக்குள்ளாகாது தப்பிச்சென்று விட்டனர். இந்தப்பள்ளியைப் பாருங்கள் எவ்வளவு கல்லுகள். இந்த கல்லுகள் மனிதர்களுக்குப்பட்டாலே பலியாகியிருப்பர்.

மௌலவியொருவரை முழங்காலில் வைத்து படையினர் தாக்கினர். பக்கத்திலுள்ள கல்லொழுவ பகுதியில் எமது மக்கள் அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தனர். அந்தப்பகுதிக்கு வந்த ஆயுதப்படையினர் எமது மக்களைப் பார்த்துக்கேட்ட கேள்வி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன்கவலையையும் ஏற்படுத்தியது.

“ உம்பாலாயே எயுன்ஹ் அப்பே எயுன்ட கால தியனவத ? ”உங்கட ஆட்கள் எங்கட ஆட்களுக்கு அடித்து விட்டார்களா ” என கேட்டார்கள்.

இதன் பின் எமது மௌலவியொருவரையும் முழங்காலில் இருக்க வைத்து அவர் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இந்த நேரத்தில் ஊர்மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட ஊர்மக்கள் மீது தாக்குதல் நடத்துவதே பாதுகாப்பு படையினரின் நோக்கமாக இருந்தது.

பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய பின்னர் அங்கு வந்த படையினர் “தங் அத்தி உம்பலா யன்ட”அடித்தது போதும் வெளியேறுங்கள் என்று கூறிய காணொளி எம்மிடம் இருக்கின்றது. காணொளியை எமக்கு காண்பித்தார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது இருந்தும் ஏன் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டார்கள். 

நாங்கள் இலங்கை பிரஜைகள் இல்லையா ? எமக்கும் இந்த நாட்டில் வாழ்வதற்கான உரிமையுள்ளது. சட்டமென்பது அனைவருக்கும் சமமானது. ஆனால் இங்கு நடப்பதை நோக்கினால் ...... அவர் கதைக்கமுடியவில்லை. ஆதங்கமடைகின்றார்.

புரட்டி போடப்பட்ட ஏழை மகனின் 'வடைத் தட்டு'

பின்னர் அங்கு வீதியின் ஓரத்தில் புரட்டி தள்ளப்பட்டிருந்த கடை கூடாரம் ஒன்றை ஒருவர் சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரை அனுகிய போது அவரின் முகத்தில் ஆயிரம் வேதனைகளும் துன்பமும் பிரதிபலித்தன.

'வாங்க தம்பி. வந்து பாருங்கள். எனது வடைத் தட்டை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. வீதியில் செல்பவர்களுக்கு வடை விற்று அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தேன். ஆனால் இன்று எனது வாழ்வாதாரத்தையே இல்லாமல் செய்துள்ளார்கள் என்றார்.

பாவம் ஒரு ஏழை மனிதை கூட விட்டு வைக்கவில்லை இந்த காடையர் கூட்டம். 

பாரிய அரசியல் பின்னணி உள்ளது

அந்த இடத்தில் இருந்து மற்றுமொரு நபர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வன்முறை சம்பவங்களின் பின்னால் பாரிய அரசியல் பின்னணியொன்று காணப்படுகின்றது. காட்பொட் வீரர்களே இவ்வாறு வந்துசென்றுள்ளார்கள். 

நேருக்குநேர் மோதத்தெரியாதவர்கள் ஊரடங்குச்சட்டத்தை அமுல் செய்து எம்மை வீட்டுக்கு அனுப்பிவிட்டு எமதுசொத்துக்களை சேதப்படுத்திவிட்டார்கள்.

இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். ஆனால் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைபெற அச்சமாக இருக்கின்றது.

அவர்களுக்கு. அவ்வாறு சென்று சிகிச்சைபெற்றால் அவர்களின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம் சுமார் 10 ,15 பேர் காயமடைந்திருப்பர்.

மினுவாங்கொடை முதல் கல்லொழுவை எக்சத் சந்திவரை முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இந்தப் பகுதியில் தான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டள்ளன என்றார்.

பொருளாதாரத்தை வீழ்த்தவே தாக்குதல்

உடைத்து நொருக்கப்பட்ட கடைக்குள் நின்ற ஒருவரை அணுகினோம். அந்த அழகிய கடை நாசமாக்கப்பட்டிருந்து. அவருடைய மனநிலை எவ்வாறு இருக்கின்றது அவரின் முகத்தின் மூலம் தெரிந்தது.

என்ன நடந்தது என கேட்ட போது?

'எரியூட்டப்பட்ட கடைகள் அனைத்தும் 10 வருடங்கள் பழைமையான கடைகள். நல்ல முறையில் வியாபாரம் இடம்பெற்ற கடைகள்.

முஸ்லிம் சமூகத்தை பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை ஏற்படுத்தவே இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த செயற்பாட்டால் இலங்கையின் பொருளாதாரமே பின்னடைவை சந்தித்துள்ளது என்று அவர்களுக்கு புரியவில்லை. இந்த வன்முறையால் நாடே வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அரசாங்கமே பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தான் இந்த வீழ்ச்சியை ஈடுசெய்யவேண்டும்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்கு நாம் சென்றபோது, அங்கிருந்த படையினர் நம்மை மறைத்தார் இதன்போது குறுக்கிட்ட நபரொருவர் எமது வேலையை செய்ய இடமளியுங்கள். சட்டத்தின் அனுமதியுடனேயே நாங்களும் இங்கு வந்துள்ளோம் என குறித்த படை வீரரிடம் தெரிவித்தார். அவர் தான் 46 வயதுடைய சட்டத்தரணி நியாஸ் முஹம்மட்.

இயல்பாகவே அவர் எம்முடன் கதைக்க ஆரம்பித்தார்.

முஸ்லிம்களை இல்லாதொழிப்பதற்கு முயற்சி 'பாருங்கள் உங்களது கடமையை செய்யக்கூட இவர்கள் இடையூறு செய்கின்றனர். 

இலங்கை நான்கு இனங்களை உள்ளடக்கிய ஒரு அழகான நாடு. 30 வருடங்களாக ஒரு இனத்திற்கு எதிராக போராடி தீயில் கருகி இப்போது தான் நிம்மதியாக வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் தீவிரவாதிகளின் செயற்பாடால் நாடு முற்றாக நாசமாகியுள்ளது.

முஸ்லிம்களை வேற்று இனத்தவர்களுடன் பகைமையை ஏற்படுத்தி அவர்களை இல்லாமொழிப்பதற்கே தற்போது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

21 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்திற்கு ஏனையவர்களைவிட கவலைப்பட்டவர்களும் நாமே. அதனை இல்லாதொழிக்கவேண்டுமென முன்னின்று செயற்பட்டவர்களும் நாமே. 

சஹ்ரான் தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னே நாம் தகவல் வழங்கியுள்ளோம். 21 ஆம் திகதி சம்பவத்தின் பின்னரும் கூட சஹ்ரானின் குழுவினரை முஸ்லிம் மக்கள் காட்டிக்கொடுத்தார்கள். அவர்களுக்கு பொலிஸாரினால் சன்மானம் கூட வழங்கப்பட்டது. 

எம்மால் தகவல்கள் மாத்திரமே வழங்க முடியும் நாம் புலனாய்வுப் பிரிவினராக செயற்பட முடியாது.

ஐ.எஸ். தொழினுட்ப ரீதியில் பயங்கரமான இயக்கம் ஐ.எஸ். இயக்கமானது உலகளவில் தொழிநுட்ப ரீதியில் மிக பயங்கரம் வாய்ந்த இயக்கமாகும். பள்ளிவாசல்களில் வாள்களை எடுப்பதால் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபடுத்தி விட முடியாது. ஏனெனில் அவர்கள் தொழில்நுட்பரீதியில் வலுவான இயக்கமாகும்.

மத்ரசாக்களில் பயங்கரவாதம் கற்பிக்கப்படுவதில்லை. சஹ்ரான் ஒரு மௌவிகூட இல்லை. அவர் மௌவியாகக் கூட பதிவு செய்யப்படவில்லை. அவர் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று தேவையில்லாத விடயங்களை தலையில் போட்டு நாசகாரசெயல்களை செய்துள்ளார்.

இவர்களின் செயற்பாடால் எமது சகோதர தமிழனம் கூட இஸ்லாமியர்களைக் தீவிரவாதிகளாகப் பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் இந்நேரத்தில் 3 இனங்களும் ஒன்றுபட்டு ஆரம்பகாலத்தில் இருந்ததைப்போன்று அந்நியோன்யமாக இருக்க வேண்டும். அதாவது மதங்களை கேவலப்படுத்தும் நோக்கிலேயே தற்பேது பல வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

'கடவுள் காடையன்"

ஒரு மதத்தின் கடவுள், 'நீ அவனை கொண்டுவிட்டு வா உனக்கு நான் 72 தேவகன்னியர்களைத் தருகிறேன்" என்று கூறினால் அந்த கடவுள் காடையனே !

கடவுள் தூண்டுபவரென்றால் கடவுள் ஒரு பயங்கரவாதி. ஆனால் இஸ்லாம் மாதத்தில் இவ்வாறானதொரு கருத்து இல்லை, அப்படி இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஷரியா சட்டத்தை ஒருபோதும் இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென இஸ்லாமியர்கள் கோரவில்லை. 

யாழ்ப்பாணத்தவர்களுக்கு தேச வழமைச்சட்டம் உள்ளது. கண்டி மக்களுக்கு கண்டிச் சட்டம் உள்ளது. முஸ்லிம்களுக்கு முஸ்லிம் விவாகரத்துச் சட்டமுள்ளது. 

அதாவது அந்தந்த இனங்களின் தனித் தன்மையை பேணுவதற்காக இந்த சட்டங்கள் காணப்படுகின்றது. அதனைக்கூட தீவிரவாதிகள் இல்லாமலாக்க நினைக்கின்றார்கள்.

21 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டும் சுமார் 3 கிழமைகள் கடந்துள்ள போதும் பள்ளிவாசல்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் பாரிய அரசியல் நோக்கம் இருக்கின்றதென்பதை உறுதியாக புலப்படுகின்றது.

பாதுகாப்புப் படையின் தீவிரவாதமும் இதில் காணப்படுகின்றது. இதற்கு காரணம் எமது பிரதேசத்திற்கு வந்த பாதுகாப்புப் படையினர் பள்ளி மௌவிகளின் தாடியைப் பிடித்து அடித்தார்கள். அவர்களை ஒரு வார்ததை கூட பேச அனுமதிக்கவில்லை. காரணமில்லாது அடித்தார்கள்.

அரச பயங்கரவாதமோ என்ற சந்தேகம்

ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தால் வீட்டுக்குள் மின்குமிழ்களை போடுவதற்கோ வீட்டுக்குள் கதைப்பதற்கோ சட்டமில்லை. எமது வாலிபர்கள் தாக்கப்பட்டார்கள். 

அரச பயங்கரவாதம் தலைதூக்கப்படுகின்றதாக என்ற பாரிய சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தலைதூக்கினால் இந்த நாட்டில் எந்தவொரு சிறுபான்மையினரும் வாழ முடியாத நிலையேற்கடும். நாம் நாட்டுக்கு எதிராக பேசவில்லை. யதார்த்தத்தை புரிந்து கொண்டே பேசுகின்றோம்.

எமது பொருளாதாரத்தை சீரழித்து விட்டார்கள் சுமார் 100 கோடி பெறுமதியான நஷ்டமேற்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னரே தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இதை நான் எங்கு வந்து கூறவும் தயார். இந்த தாக்குதலுக்கு அனுமதித்தவர்கள் யார். தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டும்.

சிறுபான்மை மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சி

1990 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட அரசாங்கம் முயற்சித்தது. காத்தான்குடி சமமபவங்கள் கூட இவ்வாறே இடம்பெற்றன. சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைந்து வாழ்வது பெரும்பான்மைனயினத்தவர்களுக்கு அச்சுறுத்தலாகக் கூட இருக்கலாம். ஆனால் சிறுபான்மையினத்தவர்களை பிரிப்பதற்கு ஒரு சக்தி முயற்சிக்கின்றது.

பாதுகாப்பு இந்த நாட்டிலுள்ளதென்று எவ்வாறு நம்பமுடியும் டென் பிரியசாத், அமித் வீரசிங்க போன்றோர் திகன சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு வழக்கு இடம்பெற்றது. இந்த வழக்கிற்கு என்ன நடந்தது. தற்போது அவர்களை கைதுசெய்து சிலரை விடுதலை செய்துள்ளனர்.

பள்ளிவாசல்களில் கத்தி, வாள்களை மீட்பதாக ஊடகங்களில் தெரிவித்து சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் மீது ஒரு கிளர்ச்சியை தூண்டியுள்ளார்கள்.

யுத்த களத்தில் கூட பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்களை தாக்கக் கூடாதென மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஷரியா சட்டத்திலும் சொல்லப்படவில்லை. ஐ.எஸ் தீவிரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்மே இவர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த தாக்குதல் சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு கடுமையான உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். 

இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை தேற்றுவிப்பர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். தெற்காசிய அரசியலை எடுத்துக்கொண்டால் இனவாதத்தை கொண்டே நடத்தப்படுகின்றது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இனவாத அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டை நாசமாக்கும் எண்ணமில்லை

வரலாறு உணர்த்துவதென்றால் ஒரு இனம் நசுக்கப்படும் போது விடுதலைப் போராட்டங்கள் உருவாகும் . அதற்காக நாம் தீவிரவாதிகளாக மாறப்போகின்றோம் என்று அர்த்தமில்லலை. 

எமது இளைஞர்களை அதற்குள் தள்ளிவிட்டு நாட்டை நாசமாக்கும் எண்ணமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து சுயாட்சி, சமத்துவத்தை உருவாக்க வேண்டும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாததடைச்சட்டத்தின் 2 ஆவது பிரிவின் கீழ் ஒரு இனத்திற்கு எதிராக கருத்துத் தெரிவிப்பர்கள் கூட கைதுசெய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டள்ளது.

ஆனால் சில பெரும்பான்மை ஊடகங்கள் இனவாதத்தை தூண்டும் வைகயில் செயல்பட்டுவருகின்றன. அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் அமைப்பின் 14 ஆவது உறுப்புரையின் கீழ் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம் காணப்படுகின்றது. அந்த கருத்துச் சுதந்திரம் இனமுறுகலை ஏற்படுத்துவதாக அமைந்து விடக்கூடாது. இனவாதக் கருத்துக்களை தெரிவித்தவர்களை ஏன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய முடியாதுள்ளனர். இது எமக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்கள் ஒருபோதும் தமது கையில் சட்டத்தை எடுக்க மாட்டார்கள். அதனை நாம் வரலாற்றில் பலமுறை வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.

முதல் நாளே எனக்கு தகவல் வந்தது

மினுவாங்கொடையில் முதல்முதல் தாக்குதல் நடத்தப்பட்ட பிரபலமான பவாஸ் என்ற ஹோட்டலின் உரிமையாளரான 52 வயதுடைய எம்.எம். இம்தாஸ் வாக்குமூலம் வழங்குவதற்காக தாக்குதல் இடம்பெற்ற பள்ளிவாசலுக்கு வந்திருந்தார். அவரை சந்தித்த நாம்...

21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் எமது வியாபார நடவடிக்கைகள் குறைவடைந்து விட்டது. பெரும்பான்மை சிறுபான்மையென சகல இனமக்களும் வருவார்கள். ஆனால் தற்போது யாரும் வருவதில்லை. 

21 ஆம் திகதி தாக்குதலுக்குப்பின்னர் ஒவ்வொருநாளும் 30 ஆயிரம் ரூபா நஸ்டம் ஏற்பட்டது. இருந்தும் அதனைக்கொண்டு நடத்தினோம்.

மினுவாங்கொடையில் தாக்குதல் நடத்துவதற்கு முதல் நாள் இரவு எமக்கு தகவல் கிடைத்தது முஸ்லிம் வியாபார நிலையங்களை தாக்கப் போவதாக. இதனையடுத்து மறுநாள் கோப்பிவத்தை பள்ளிவாசலுக்கு இந்து, கிறிஸ்தவ, பௌத்த மற்றும் இஸ்லாம் மதகுருமார்கள் அனைவருடன் பொலிஸாரையும் அழைத்து இந்த முன்னெச்சரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

இந்த சந்திப்பிற்காக பௌத்த தேரரருக்கு தொலைபேசியூடாக அழைப்பை ஏற்படுத்தும் போது எனது தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது எனது ஹோட்டல் மீது தாக்குதல் இடம்பெறுவதாக. சரியாக மாலை 5.30 மணியிருக்கும் தாக்குதல் இடம்பெறும் போது. நான் எனது வாகனத்தையும் எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தேன். இடையில் என்னைத் தடுத்தார்கள் அங்கு போக வேண்டாமென்று. அங்கு எனது மகன் மற்றும் ஊழியர்கள் இருந்ததால் நான் அங்கு சென்றேன்.

மோட்டார் சைக்கிளில் 30 பேர் தாக்குதலுக்கு தயாராகி வந்திருந்தனர். பொல்லுகள், வாள்களுடன் வந்திருந்தார்கள். திடீரென 15 நிமிடத்தில் 300 மற்றும் 400 பேர் அவ்விடத்தில் குவிந்தனர். அவர்கள் எவ்வாறு எங்கிருந்து வந்தனர் என்று நான் நினைத்தேன். உடனே அங்கிருந்த பொலிஸார் என்னிடம் தெரிவித்தனர் பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்படும்படி. நான் வாகனத்தில் ஏறு முற்பட்டபோது கல்லொன்று வந்து என் வாகனத்தின் மீது விழுந்தது நான் அச்சமடைந்து விட்டேன்.

அங்கிருந்த பெரும்பான்மையின இளைஞரொருவர் என்னை பின்பக்கமாக இருந்த வயல்வெளியூடாக தப்பி ஓடச்சொன்னார் நான் எவ்வாறு தப்பியோடினேன் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

கைவிட்டுச்சென்ற 75 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனத்தை அடித்து நொறுக்கிவிட்டார்கள். எடுப்பதற்கு வழியில்லை. கடையையும் தரைமட்டமாக்கிவிட்டார்கள். கடையிலும் 75 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு நஷ்டமேற்பட்டுள்ளது.

40 பேர் தொழிலை இழந்துள்ளார்கள்

எனது கடையில் சிங்களவர்கள் 15 பேரும் தமிழர்கள் 10 பேரும் முஸ்லிம்கள் 15 பேரும் பணிபுரிந்து வந்தனர். இன்று அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. பிரதேசத்தில் கஸ்டப்பட்ட பிள்ளைகள் பாடசாலை முடிந்து செல்லுபோது உணவு கோட்டால் பணமில்லாது கடந்த 8 வருடங்களாக உணவு வழங்கிவந்தேன்.

தாக்கியவர்களில் முக மூடி அணிந்து வந்தவர்கள் எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தாக்குதல் சம்பவத்தை ஒரு வலையமைப்பின் மூலமே செயற்படுத்தியுள்ளனர். 

வெளிப்பிரதேசவாசிகளுக்கு முஸ்லிம்களின் கடைகள் தெரியாது எமது பிரதேசவாசிகளே அடையாளம் காட்டியுள்ளனர். சனச கட்டத்தொகுதியில் 80 கடைகள் காணப்படுகின்றன. அதில் உள்ள 3 முஸ்லிம் கடைகள் மீதே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டள்ளது. இந்த 3 கடைகளுகளும் முஸ்லிம் கடைகளென எவ்வாறு வெளிமாவட்டத்திலிருந்து வந்தவர்களுக்கு தெரியும். எனது ஹோட்டிலில் இருந்த 19 வயது மகன் காயமடைந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் சி.சி.ரி.வி. கமெராவின் வயர்களை கழற்றும் காட்சிகளும் ஹோட்டலில் இருந்து சுமார் 20 ஆயிரம் ரூபா பணத்தையும் எடுத்துச்செல்லும் காடட்சிகளும் சி.சி.ரி.வி. கமெராவில் உள்ளது.

மினுவாங்கொடையில் வெசாக் தினத்தில் தோரணங்களை அமைப்பதை நானே முன்னின்று செய்வேன். ஏனைய பிரதேசங்களை விட மினுவாங்கொடையில் வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைவாகவே காணப்பட்டது. என்ன செய்வோம். தொழிலும் இல்லை சொத்தும் இல்லை. எல்லாம் முடிந்து விட்டது. இலங்கை பிரஜைகளுக்கு கிடைத்த பரிசே இது என்றார்.

மக்கள் மீது அன்புகொண்ட அரசியல்வாதிகளே தேவை 

மினுவாங்கொடையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதலளித்துக்கொண்டிருந்த மினுவாங்கொடை மெதடிஸ் ஆலயத்தின் அருட்தந்தை நதீர எம்முடன் பேசத் தொடங்கினார்.

இங்கு நடத்தப்பட்ட தாக்குதலை எவ்வித்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம் கடைகளும் பள்ளிவாசல்களும் இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம் கடைகளுக்கு இடையில் அமைந்துள்ள 4 பெரும்பான்மைக் கடைகளும் தீயில் எரிந்துள்ளன.

மனிதனை மனிதன் அச்சத்துடன் நோக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இந்த நிலைமையை நீடிக்கவிடாது மதத்தலைவர்கள் இனஙங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தாது ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் அரசியல்வாதிகள் நாட்டு மக்களிடையே வன்முறையைத் தூண்டாது பொறுப்புடன் செயற்படுவதுடன் அரசாங்கமும் அவ்வாறு பொறுப்புடன் செயற்படவேண்டும். 

மக்கள் மீது அன்பு செலுத்தும் அரசியல்வாதியே எமக்குத் தேவை. அவர்களின் சுயலாத்திற்காக செயற்படக்கூடாது.

மினுவாங்கொடை தாக்குதலின் பின்னரும் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னரும் அரசியல்வாதிகள் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளது.

அரசியல்வாதிகள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சொத்துக்களை சேர்ப்பதற்கும் முன்னிற்காது மக்களின் நலனில் அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நான்கினத்தவர்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்திருந்தால் ஒன்றுமையனெக்கருதுவது மடமைத்தனமாகும். அதாவது ஒரு இனத்தின் தேவையையும் உரிமையையும் அறிந்து அவர்களுடன் சமத்துவத்துடன் செயற்படுவதே ஒற்றுமையாகும்.

தாக்குதல் மேற்கொள்வதற்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்கின்றேன். உங்களுடைய உடற்பலத்தை காட்டவேண்டாம். அறிவு பூர்வமாக இனங்களுடன் ஒன்றுபட்டு செயற்படுங்கள் அப்போது தான் நாட்டைக்கட்டியெழுப்ப முடியும்என்றார்.

ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்ற மூன்று வாரங்களின் பின்னர் பாரிய வன்முறைகள் வடமேல் மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. 

இந்த சம்பவங்களின் பின்னணியில் பாரிய வலையமைப்பு ஒன்று செயற்பட்டுள்ளது என எம்மால் ஊகிக்க முடிகின்றது.

சுயஇலாபத்தை எட்டவும் அரசியல் இலக்கை அடையவுமே இது போன்ற கேவலமான சம்பவங்கள் நாட்டில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதனை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே தண்டிப்பது எவ்விதத்தில் நியாயமாகும். மேலும் ஜனநாயக நாட்டில் யாரும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. ஆனால் எமது நாட்டில் அனைத்தும் தலைகீழாகவே இருக்கின்றது.

சட்டம் ஒழுங்கு என்பன இன்று கேள்விக்குறியாகியுள்ளன. பொதுமக்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் அச்சத்துடனேயே கடத்திகொண்ருக்கின்றனர்.

குறிப்பாக வன்முறைகளோ அல்லது பாரிய அழிவு சம்பவங்களோ இடம்பெற்ற பின்னர் அங்கு சென்று துக்கம் விசாரிப்பதும் அதற்கு நஸ்ட கொடுப்பதுமே அரசாங்கத்தின் செய்பாடாக இருக்கின்றது. ஒரு சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் அதனை தடுத்து நிறுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் இது செயற்பட்டதாக தெரியவில்லை. அரசாங்கம் என்னதான் நஸ்டஈடு வழங்கினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் உள்ள வேதனைகளையும் வலிகளையும் நீக்க முடியாது. 

எனவே அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மேலும்குறிப்பாக சில முஸ்லிம் பிரதேசங்களில் முன்னெடுக்கபட்ட வன்முறைகள், ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே காடையர் குழுக்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதனை பிரதேசங்களில் இருந்த சி.சி.ரி.வி. கமராக்கள் மூலமும் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.

இதுவொரு பாரதூரமான பிரச்சினை. இதுதொடர்பில் ஆராய்ந்து அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13