முள்­ளி­வாய்க்­காலின் மீதான பேரி­ன­வாதப் பேர­வலம் நிகழ்ந்து இன்­றோடு தசாப்தம் ஒன்று பூர்த்­தி­ய­டைந்­தி­ருக்­கின்ற தரு­ணத்தில் பேரி­ன­வாத பெருந்­த­கை­களால் ஓல­மி­டப்­பட்­ட­தான “பயங்­க­ர­வா­தத்­தி­ட­மி­ருந்து சுதந்­திரம், இன நல்­லி­ணக்கம், இன ஐக்­கியம், சமா­தானம், சக­வாழ்வு, புரிந்­து­ணர்வு, சம­வு­ரிமை மதச்­சு­தந்­திரம், மொழி உரிமை”  உள்­ளிட்ட இன்­னோ­ரன்ன வாசனை நிறைந்த வார்த்­தை­க­ளுக்­கெல்லாம் இன்று வரை­யிலும் அர்த்தம் தேடிக் கொண்­டி­ருக்­கி­றோமே தவிர அதனைக் கண்­ட­டை­ய­வில்லை என்­ப­துதான் ஜீர­ணிக்க முடி­யாத நிதர்­ச­ன­மாக நீடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.

முள்­ளி­வாய்க்­காலின் மரண ஓலமும் அதன் வடுக்­களும் மாறு­வ­தற்கும் மறை­வ­தற்கும் முன்­னரே மீண்டும் ஒரு பயங்­க­ர­வாத படு­கொ­லை­க­ளுக்கும் இன­வாத, மத­வாத, வன்­மு­றை­க­ளுக்கும் ஈடு­கட்ட முடி­யாத இழப்­புக்­க­ளுக்கும் முகம்­கொ­டுக்க வேண்­டிய விதிக்குள் வீழ்ந்து விட்­ட­தாக ஒரு கன­மான எண்­ணப்­பாடு ஒட்­டிக்­கொண்­டு­விட்­டது.

இன­வா­தமும், மத­வா­தமும் ஆழ­மாக வேரூன்­றி­விட்­டதால் இதி­லி­ருந்து நாமும் நாடும் மீள்­வதும் மீள முடி­யு­மென்­பதும் கடி­ன­மான ஒன்­றா­கத்தான் இருக்­கி­றது.

தமி­ழீழ விடு­தலைப் புலி­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­தரித்து ஒட்­டு­மொத்த தமி­ழர்­க­ளையும் புலி­க­ளாகப் பார்த்த சிங்­கள சமூ­கத்தார் இன்று புலி­களை “நில­வு­ரிமை போரா­ளி­க­ளாகப்” பார்க்­கின்­றனர்.

மறு­பு­றத்தில் விடு­தலைப் புலி­களை இல்­லா­­தொ­ழிப்­ப­தற்கு இயன்­ற­ள­வி­லான அனைத்து ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் வழங்கி ஒத்­தாதசை புரிந்த முஸ்­லிம்­கள்­மீது அதே சிங்­கள சமூ­கத்தார் பயங்­க­ர­வாத பட்டம் சூட்டி ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­கள்­மீதும் வன்­மு­றை­க­ளையும் குரோ­தங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­கின்­றனர். இது தான் இன­வா­தத்தின் இயல்பு.

என்­றாலும் “இதுவும் கடந்து போகும்” என்ற உப­தே­சத்தை எல்­லோ­ரு­மாக ஒருத­டைவை உச்­ச­ரித்­துப்­பார்க்கத் தூண்­டு­வது பொருத்­த­மாகும். 

எமது நாடு இது­வரை காலமும் இழப்­புக்­களை மாத்­தி­ரமே எதிர்­கொண்­டி­ருக்­கி­றது. ஆதலால் அடுத்த கட்­டத்­துக்­கான நகர்வு என்­பதை கன­விலும் காண­மு­டி­யா­தி­ருக்­கி­றது. இற்­றைக்கு ஐம்­பது வரு­டங்­க­ளுக்கு முன்­னரும் எமது நாடு “அபி­வி­ருத்தி அடைந்­து­வரும் நாடு” என்றே பாடப்­புத்­த­கத்­தி­னூ­டாக போதிக்­கப்­பட்­டது. அதே போதனை ஐம்­பது வரு­டங்கள் கடந்­து­விட்ட பின்­னரும் கூட வார்த்தை பிச­காது அவ்­வாறே போதிக்­கப்­ப­டு­கி­றது.

முப்­பது வருட யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் வடுக்­களை சுமந்­த­வாறே இன்றும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். அவர்­க­ளது வாழ்­வா­தாரம், பொரு­ளா­தாரம் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வில்லை என்­பதைக் கூறு­வ­தற்கு முன்னர் அவர்­க­ளுக்­கான நிலவுடைமை கூட பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை என்­பது தான் சுட்­டிக்­காட்­டத்­தக்க விட­ய­மாகும்.

இவ்­வாறு ஒரு சமூ­கத்தின் மீதான பார்­வையும் அக்­க­றையும் தளர்­வு­பட்டு நிற்­கின்ற சந்­தர்ப்­பத்தில் தான் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இயேசுக் கிறிஸ்­துவின் உயிர்ப்பு விழா தினத்தில் மத­வாத பயங்­க­ர­வாதம் ஆடிய பேயாட்­ட­த்தில் அப்­பா­வி­களின் உயிர்கள் குடிக்­கப்­பட்­டன. நொடிப்­பொ­ழுதில் எல்­லாமே நிறை­வே­றிற்று. இது மீண்­டு­வர முடி­யாத அதிர்ச்­சி­யாக உறைந்து கிடக்­கி­றது.

இயேசுக் கிறிஸ்­துவின் உயிர்ப்பு விழா தினத்தில் நடந்­தேற்­றப்­பட்­ட­தான இரக்­க­மற்ற ஈனச் செயற்­பாடு இஸ்­லாத்தை கோடிட்டுக் காட்­டி­யி­ருப்­ப­தா­லேயே அது ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் சங்­க­டத்­திற்குள் தள்­ளி­யி­ருக்­கின்­றது.  என்­றாலும் இன­வா­தத்­துக்கும், மத­வா­தத்­துக்கும் அதே­நேரம் சந்­தர்ப்ப வாதத்­துக்கும் உண்­மையை உண­ரக்­கூ­டிய பக்­குவம் இராது என்­பதன் வெளிப்­பாடே முஸ்­லிம்­களை இலக்கு வைத்த தாக்­கு­தலும் வன்­மு­றை­க­ளு­மாகும்.

“உன்­னைப்போல் உன் அய­லானை நேசி”  “ஒரு கன்­னத்தில் அறைந்தால் உனது மறு கன்­னத்­தையும் காட்டு” “எதி­ரியை மன்­னித்­து­விடு” “ஒரு முறை­யல்ல ஏழு – எழு­பது முறை மன்­னித்­து­விடு” என்று போதித்த இயே­சுக்­கி­றிஸ்து பெரிய வெள்­ளி­யன்று சிலு­வையில் தொங்கி உயிர்­விடும் தறுவாயில் தன்னை நிந்­தித்­த­வர்­க­ளையும், வஞ்­சித்­த­வர்­க­ளையும் தனது மர­ணத்­துக்கு கார­ண­மா­ன­வர்­க­ளையும் நினைத்து மன­து­ருகி, “பிதாவே இவர்கள் அறி­யாது செய்­கி­றார்கள். இவர்­களை மன்­னியும்” என்று இரந்து வேண்டி உயிர் துறக்­கிறார்.

இப்­ப­டி­யான தேவ படிப்­பி­னையில் பயிற்சி பெற்ற கிறிஸ்­த­வர்கள் இரக்­க­முள்­ள­வர்கள் என்­பதை இயேசுக் கிறிஸ்­துவின் உயிர்ப்பு விழாவின் போது நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வா­தத்தின் பின்­னரும் நிரூ­பித்­துக்­காட்­டி­யுள்­ளனர்.

இரக்­கத்தின் தேவனாம் பர­ம­பி­தாவின் தூது­வ­ரா­கவும் இலங்கைக் கிறிஸ்­த­வர்­களின் நல்ல மேய்ப்­ப­னா­கவும் மதத் தலை­வர்­களில் எடுத்­துக்­காட்­டா­கவும் சமா­தா­னத்தின் யுக புரு­ஷ­ரா­கவும் தலை­மைத்­து­வங்­களின் வழி­காட்­டி­யா­கவும் திகழ்கின்ற பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை, எமது நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் அடுத்த கட்­டத்தை மிக உன்­ன­த­மாகக் கையாண்­டி­ருந்­தது முழு உல­கமும் அறிந்­ததே.

ஆனாலும் கிறிஸ்­த­வர்கள் மீது நடத்­தப்­பட்ட மத­வாதப் பயங்­க­ர­வா­த­மா­னது திசை­மாறி இன­வாத மற்றும் சந்­தர்ப்­ப­வாத வன்­மு­றை­யாக இன்­று­ உ­ரு­வெ­டுத்து நிற்­கி­றது.

இன­வாதம், சந்­தர்ப்­ப­வாதம் மற்றும் மத­வாதம் என்­பன ஒன்று சேர்ந்­து­விட்ட கார­ணத்தால்  உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளி­னதும் அவர்­க­ளது உற­வு­க­ளி­னதும் அதே­நேரம் இன்­று­வரை வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்று வரு­வோ­ரி­னதும் மீதான இரக்கம், கரி­சனை நினைப்பு என்­பன மழுங்­க­டிக்­கப்­பட்­டு­விட்­டன. அவர்கள் மறக்­கப்­பட்டு விட்­டார்கள் என்­பதே பொருத்­த­மா­கி­றது.

அன்று பாதிக்­கப்­பட்­ட­வர்­களை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான வழி­வகை ஏற்­ப­டுத்­தப்­ப­டாத கட்­டத்­துக்­குள்­ளேயே முஸ்­லிம்கள் மீதான வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்கள் மீதான வன்­மு­றை­யா­னது எதிர்­கால அர­சியல் இலாபம் கரு­தி­யதும் குரோத எண்ணம் கொண்­ட­து­மா­கவே அறி­யப்­ப­டு­கி­றது.

இன­வாதம் என்­பது குறிப்­பிட்ட ஒரு சமூ­கத்தில் மாத்­திரம் ஒட்­டிக்­கொண்­டி­ருக்­க­வில்லை. அது அனைத்து தரப்­பி­ன­ரி­டத்­திலும் ஊறிப்­போ­யுள்ள அரக்க குண­மாகும். இதனை நேர­டி­யா­கவே இன்று கண்­டு­கொண்­டி­ருக்­கிறோம்.

சமா­தா­னத்தின் யுக புருஷர் பேராயர்

நீர்­கொ­ழும்பில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்­டதை அறிந்த பேராயர் மறு­தினம் அங்கு நேர­டி­யாக சென்று பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் மக்­களை சந்­தித்து ஆறுதல் கூறி­யி­ருந்தார். பள்­ளி­வா­ச­லுக்கும் சென்று மதத்­த­லை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யது மாத்­தி­ர­மன்றி நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் குறிப்­பாக அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் சமா­தானம், ஐக்­கியம், சக­வாழ்வு குறித்த நல்ல செய்­தியை வழங்­கி­யி­ருந்தார்.

அன்பு, கருணை, இரக்கம், பொறுமை மற்றும் சகிப்­புத்­தன்மை அனைத்தும் பொருந்­தி­ய­வராய் பேராயர் செயற்­பட்­டி­ருந்தார். ஆனாலும் இந்த நெகிழ்வுத் தன்­மை­யா­னது ஏனைய தரப்­பி­ன­ரி­டத்தில் காணப்­ப­ட­வில்லை.

முஸ்­லிம்கள் தாக்­கு­த­லுக்கு இலக்­கான பிர­தே­சங்­க­ளுக்கு படை­யெ­டுத்த அர­சி­யல்­வா­திகள் ஈஸ்டர் தினத்­தன்று உயி­ரி­ழந்­த­வர்­க­ளது உற­வி­னர்­களை சந்­தித்­த­தா­கவோ வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்­றோரை சந்­தித்துப் பேசி ஆறுதல் கூறி­ய­தா­கவோ தெரி­ய­வில்லை.

இத்­த­கைய வேறு­பாட்டு சிந்­த­னைகள் மாற வேண்டும். ஐக்­கியம் பிறப்­ப­தற்கும் புரிந்­து­ணர்­வுக்கும் இரக்கம், தயாள குணம் குடி­கொள்ள வேண்டும்.

வன்­முறை வேண்­டாமே

இன்று எமது நாடு வன்­மு­றை­க­ளாலும் குரோ­தங்­க­ளாலும் சூழப்­பட்­டி­ருக்­கி­றது. எந்த இனத்­த­வ­ராக இருந்­தாலும் இனங்­களின் மீதான வன்­மு­றையும் கொடிய பார்­வையும் இணைந்து எமது நாட்டின் சமா­தா­னத்தை சீர்­கு­லைக்­கின்­றன. அன்பை அரு­கச்­செய்து வெறுப்பை விதைக்­கின்­றன.

இந்த சந்­தர்ப்­பத்தில் 83 கறுப்பு ஜூலைக் கல­வ­ரத்­தையும் சற்று மீட்டிப் பார்த்­தோ­மானால் அன்று அரச பயங்­க­ர­வாதம் தமிழ் மக்­கள்­மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருந்­தது. தமி­ழர்கள் கொடூ­ர­மாக கொல்­லப்­பட்­டார்கள். தமி­ழர்­க­ளது சொத்­துக்கள் சூறை­யா­டப்­பட்­டன. அர­சாங்­கத்­தி­னதும் ஆயு­தப்­ப­டை­யி­னதும் தயவில் அனைத்தும் நடந்­தே­றின.

அந்த வரி­சையில் கடந்த பத்து வரு­டங்­க­ளுக்கு முற்­பட்ட காலத்தில் இந்­நாட்டில் ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களும் எந்­த­ளவில் துன்­பத்­துக்கு ஆளாக்­கப்­பட்­டார்­களோ நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டார்­களோ எவ்­வாறு தமி­ழர்கள் மீது கொடிய பார்வை வீசப்­பட்­டதோ அதே நிலைமை இன்று முஸ்­லிம்கள் மீதும் காட்­டப்­ப­டு­கின்­றது. 

பேரி­ன­வா­தி­க­ளி­னதும் பிற்­போக்கு சிந்­த­னை­யா­ளர்­க­ளி­னதும் செயற்­பா­டு­களால் இன்று முஸ்­லிம்கள் சொல்­லொண்ணாத் துய­ரங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். முஸ்­லிம்­க­ளது சொத்­துக்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன. நிர்க்­கதி நிலைகள் திட்­ட­மிட்டு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. இது எமது நாட்டின் எதிர்­கா­லத்­துக்கு உகந்­த­தாக இல்லை. இந்­நிலை கடந்து போக வேண்டும்.

இறு­தி­யாக நாடும், நாட்டு மக்­களும் இன்று மீண்டும் அதள பாதா­ளத்­துக்குள் தள்­ளப்­பட்­டி­ருப்­பதாய் ஒரு உணர்வு. இன்­ற­ள­வி­லான நிலை­மை­க­ளுக்கு நாட்டின் இரு வேறு தலை­வர்­க­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  ஆகி­யோ­ரையும் அர­சியல் வாதி­க­ளையும் அதிகாரிகளையும் மக்கள் குற்றவாளிகளாகப் பார்க்கின்றனர்.

முப்பது வருடகால யுத்தம் முள்ளிவாய்க்கால் அவலத்தில் முடிவுற்றதற்கும் அதன் பின்னரான பராமுக நடவடிக்கைகளுக்கும் உயிர்ப்பு விழா நாளில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான செயற்பாட்டுக்கும் இன்று வரையிலான இன வன்முறைகளுக்கும் அரச மற்றும் அரசியல் இயந்திரங்களே பின்னணிக் காரணிகள்.

 அரசியல்வாதிகளே… மக்களுக்காகவே நீங்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகிறீர்கள். ஆகவே உங்களது அரசியல் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக இருக்கக்கூடாது.

மதத்தலைவர்களே… நல்லெண்ணங்களை விதையுங்கள். நல்வழிகாட்டியாய் மாறுங்கள். அன்பினால் பகைமையை வெல்லலாம் என்பதை எடுத்துரையுங்கள்.

இன்னும் ஐம்பது வருடங்கள் கடந்த பின்னரும் எமக்குப் பின்னால் வரும் சந்ததியினர் “எமது நாடு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு” என்ற சொற்றொடரை பாடப்புத்தகத்தில் பார்க்காதிருக்கும் வகையில் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

நாடு சிந்திக்கப்படட்டும்.

மனிதம் மதிக்கப்படட்டும்.

மக்கள் மாண்புறட்டும்.

கடந்தவை கடந்தவையாகட்டும். புதிய தலைமுறையாய் பயணிப்போம். சகலரும் சமாதானத்துக்காய் பிரார்த்திப்போம்.

ஜே.ஜி.ஸ்டீபன்