உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலானது, ஈழத்தமிழர்களை எப்பொழுது ஆயுத ரீதியாக அடக்கி வைத்திருக்க முடியும் என்று சிங்கள இராணுவச் சிந்தனையோடு அவர்கள் எதிர்பார்த்தார்களோ அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் இப்பொழுது அவர்களின் நடவடிக்கைகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மற்றும் வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்று கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சூழலில் ஏப்பரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் நடைபெற்ற அரசியல் மாற்றம் என்பதும் தீவிரவாதத் தாக்குதலின் நடவடிக்கை என்பதும் ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டத்தின் பாதையில் ஒரு வித்தியாசமான போக்கினை அல்லது மாற்றுச் சிந்திக்க வேண்டிய ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. 

இந்த நிலையில் அரசியல் சூழல் மாற்றம் பெறாதவகையில் குண்டு வெடிப்புகள் நடைபெற்ற இடங்களைத் தவிர பாதுகாப்பு என்ற அடிப்படையிலே இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினரின் செயற்பாடுகள் என்பது தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில், குறிப்பாக தமிழர்கள் குடியிருக்கின்ற பிரதேசங்களில் அபரிதமான வகையிலே அவர்களை அடக்குகின்ற முறையாகவே காணப்படுகின்றது.

இது எப்பொழுது தமிழர்களை ஆயுத ரீதியாக அடக்கி வைத்திருக்க முடியும் என்று சிங்கள இராணுவச் சிந்தனையோடு அவர்கள் எதிர்பார்த்தார்களோ அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் இப்பொழுது அவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. 

இந்த நிலையில், இந்தக் காலச்சூழல் என்பது எம்மவர்களைப் பொறுத்தவரையில் எமது மக்களுக்கு இன்னுமொரு நிம்மதியான சூழலினை உருவாக்கித் தரவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுகின்றது என்றார்.