முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதி கடற்கரையில் வளர்மதி கடற்தொழிலாளர் சங்கத்திற்குச் சொந்தமான காணி ஒன்றில் கடற்தொழிலாளர் சங்கத்திற்கு ஓய்வு மண்டபம் அமைத்துக்கொடுப்பதற்கு பெரண்டீனா நிறுவனம் வேலைகளைச் செய்து வந்துள்ளது.

இந்நிலையில் மலசலக்கூடம் அமைத்து அதற்கான அத்திவாரங்கள் இட்டுவிட்டு மலசலக்கூடத்திற்கான குழியினை தோண்டும் போது குறித்த  எலும்புக்கூடு ஒன்றினை தொழிலாளர்கள் இனம் கண்டுள்ளார்கள்.

விடுதலைப்புலிகளின் இராணுவச் சீருடை மற்றும் குப்பி,கைக்குண்டுகள் என்பன அருகில் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து அருகில் உள்ள படையினருக்குத் தகவல் கொடுத்துள்ளதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி சம்பவ இடத்தினை சென்று பார்வையிட்டுள்ளதுடன் நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதியின் உத்தரவினை நாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.