யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டில் முஸ்லிம்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொக்குவில் கேணியடியில் சந்தேகத்துக்கு இடமாக இருவர் நடமாடுவது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சந்தேக நபர்கள் இருவரும் ஓட்டுமடத்தில் வசிப்பதாகத் தெரிவித்த போதும் கொக்குவிலில் நடமாடியமைக்கான காரணத்தைத் தெரிவிக்காததால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

“சந்தேக நபர்கள் முஸ்லிம்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்தி அடையாள அட்டையை வழங்கினர். அவர்கள் ஓட்டுமடத்தில் வசிக்கின்ற போதும் கொக்குவில் பகுதியில் நடமாடியமைக்கான காரணத்தைக் கூறவில்லை. அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடவேண்டும்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

“சந்தேக நபர்களை கொக்குவிலில் கைது செய்யவில்லை. அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றே பொலிஸார் கைது செய்தனர். அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், சந்தேக நபர்களை வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.