உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஐக்கிய இராச்சியம் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அதற்கு முன்னோடியாக ஸ்கொட்லாந்துடன் நாளையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளன.

இந்த இரண்டு போட்டிகளும் எடின்பேர்க் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

திமுத் கருணாரட்ன தலைமயிலான சிரேஷ்ட வீரரும் முன்னாள் அணித் தலைவருமான ஏஞ்சலோ மெத்யூஸ், அனுபசாலியான திசர பேரேரா, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், லஹிரு திரிமான்ன, தனஞ்சய டி சில்வா ஆகியோர் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்துவதுடன் சுரங்க லக்மால், நுவன் ப்ரதீப், இசுரு உதான, ஜீவன் மெண்டிஸ் மற்றும் மிலிந்த சிறிவர்தன பந்துவீச்சில் பிரதான பங்களிப்பு வழங்கவுள்ளனர்.

உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் அவிஷ்க பெர்னாண்டோ, லசித் மாலிங்க, ஜெவ்றி வேண்டர்சே ஆகியோரும் இடம்பெறுகின்றனர். 

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு கடைசிப் பந்தில் வெற்றியை ஈட்டிக்கொடுத்த வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க எதிர்வரும் 22ஆம் திகதியே இலங்கை அணியினருடம் இணைவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பிரகாசிக்கத் தவறிவந்துள்ள இலங்கை அணி, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பதாக தனது பலத்தை மற்றும் ஆற்றல்களைப் பரீட்சிக்கும் வகையில் ஸ்கொட்லாந்தை இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுகின்றது.

ஸ்கொட்லாந்துக்கு எதிராக இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்  போட்டியில் விளையாடிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெற்றிபெற்றுள்ளது.

ஆனால் அண்மைக்காலத் தோல்விகளால் இலங்கைக்கு இந்தத் தொடர் பெருஞ்சவாலை ஏற்படுத்தும் என கருதப்படுகின்றது.

இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் தற்போது விளையாடிவரும் தொடர்களில் கணிசமான ஓட்டங்களைப் பெற்றுவரும் நிலையில் இலங்கை அணியும் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளும் வகையில் திறமையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கொட்லாந்துடனான இரண்டு போட்டிகளைத் தொடர்ந்து உலகக் கிண்ணப் போட்டிக்கு தயாராகும் பொருட்டு தென் ஆபிரிக்காவுடன் கார்டிவ் அரங்கில் எதிர்வரும் 24ஆம் திகதியும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சௌத்ஹம்ப்டனில் எதிர்வரும் 27ஆம் திகதியும் பயிற்சிப் போட்டிகளில் இலங்கை விளையாடவுள்ளது.

உலகக் கிண்ணத்தில் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தை கார்டிவ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி சந்திக்கவிருக்கின்றது.

(நெவில் அன்தனி)