இங்கிலாந்து மற்றும் வெல்ஸில் இவ் வருடம் நடைபெறவுள்ள பத்து நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வழங்கப்படும் மொத்தப் பணப்பரிசுத் தொகை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். (ஒரு அமெரிக்க டொலர் இலங்கை நாணயப்படி 175.95 ரூபா)

சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்றைய தினம் (வெள்ளி) பணப்பரிசு விபரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் அரங்கில் எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி உலக சம்பியனாகும் அணிக்கு உலகக் கிண்ணத்துடன் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாகக் கிடைக்கும்.

46 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவே சம்பியன் அணிக்கு வழங்கப்படும் அதிகூடிய பணப் பரிசுத் தொகையாகும்.

இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 2 மில்லியன் டொலர்கள் கிடைக்கும்.

இம் மாதம் 30ஆம் திகதியிலிருந்து 46 நாட்கள் நீடிக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அரை இறுதிகளில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளது.

ஒவ்வொரு லீக் போட்டியிலும் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா 40,000 அமெரிக்க டொலர்களும் லீக் சுற்றுடன் வெளியேறும் 6 அணிகளுக்கு தலா ஒரு இலட்சம் டொலர்களும் வழங்கப்படும்.

ஐந்து தடவைகள் சம்பியனானதும் நடப்பு சம்பியனுமான அவுஸ்திரேலியா, தலா இரண்டு தடவைகள் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா, தலா ஒரு தடவை சம்பியனான பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இங்கிலாந்து, பங்களாதேஷ், நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் இவ் வருடம் நடைபெறவுள்ள 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பங்குபற்றுகின்றன.

ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று ஒரு தடவை மோதும் வகையில் லீக் சுற்று அமையும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை அடையும் அணிகள் அரை இறுதிகளிலும் அவற்றில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியிலும் விளையாடும்.

(நெவில் அன்தனி)