Published by T. Saranya on 2019-05-17 15:53:23
(நா.தனுஜா)
ரிஷாத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் சமர்ப்பித்திருக்கின்றோம். அதுகுறித்து கட்சித்தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று அவர் கூறினார்.
உண்மையிலேயே இதுவிடயத்தில் கட்சித்தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தும் தினத்தை சபாநாயகரே தீர்மானிக்க முடியும்.
எனவே அடுத்து பாராளுமன்றம் கூடும் போது நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்துகின்ற தினத்தை சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்பதுடன், நாட்டை முறையாக நிர்வகிக்க முடியாத இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.