(ச.லோக தர்ஷினி)


இன்றைய உலகின் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து வாழவேண்டிய கட்டாயத்திலேயே மனிதன் உள்ளான். உலகில் மிக வேக­மாக வளர்ந்து வரும் துறை­களில் மிகமுக்கிய இடத்தை தொடர்பாடல் துறை பிடித்துள்ளது. 

இந்நிலையில், இந்த ஆண்டு, உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்படுகின்றது. 1969 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆண்டுதோறும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. அத்தோடு, 1855 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சர்வதேச டெலிகிராப் மாநாடு பாரிஸில் கையெழுத்திட்டமையும் குறிப்பிடதக்கது.  

தொலைத்தொடர்பாடல் துறையின் தோற்றப்பாட்டை எடுத்து நோக்குவோமானால், ஆரம்பகால மனிதன் சைகை, புறாக்கள், முரசு கொட்டுதல், தூது விடுதல் போன்ற முறைகளினால் ஓர் இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு தகவல்களை வழங்கினான். பின்னர் சற்று வளர்ச்சிப்பெற்று, கடிதம், தந்தி, மின்­னஞ்சல், தொலை­பேசி மற்றும் கணனி என அதன் வளர்ச்சியை நீடித்துக்கொண்டான்.


அந்தவகையில், தொழில்­நுட்ப வளர்ச்­சியின் முதல் அங்கமாக, 1450 ஆம் ஆண்டு, ஜேர்மனியைச் சேர்ந்த யொகான் குட்டன்பெர்க் என்பவரால் அச்சு இயந்­தி­ரம் கண்­டு­பி­டிக்கப்பட்டது. இங்கு ஆரம்பித்த பத்திரிகையின் வடிவம் சற்றே விரிவடைந்து, கிர­ஹாம்பெல்லால் கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி தொடர்பாடலாக வளர்ச்சிக் கட்டத்தை எட்டியது.   

பின்னர் இத்தொலைதொடர்பானது, வானொலி, தொலைக்­காட்சி, தொலை­பேசி, கைய­டக்­கத்­தொ­லை­பேசி, மின்­நகல், மின்­னஞ்சல், இணையம், 3G கைப்பேசி, செய்­மதித் தொடர்­புகள் என்­பன நவீன தொலைத்தொடர்பு சேவைக்குள் உள்­வாங்­கப்­பட்­டு, தற்போதைய விஞ்ஞான உலகில் மனிதனோடு, மனிதனாக உலா வருகின்றன.

தொழி­நுட்பத் தொலைத்­தொ­டர்பு வளர்ச்­சி­யின் படிநிலைகளை எடுத்து நோக்கினால், இணையம் மிக முக்கிய அங்கமாக கருதப்படுகின்றது. எமக்குத்தேவையான சகல சந்தேகங்களை தீர்த்து வைக்கின்ற ஓர் ஆசானாகவும், உலகளாவிய ரீதியிலான தகவல் பரிமாற்றத்தினை மிக இலவகுவாக மேற்கொள்ளக்கூடிய தொழில்நுட்ப மையமாகவும் இவ்விணையம் தொழிற்படுகின்றது.

இன்றைய உலகின், ஒவ்வொரு நாடுகளின் பொருளாதார வளச்சியிலும், தனிமனித வளர்ச்சியிலும், மனிதனோடு மனிதனாக பிணைந்துள்ளதோர் விடயமாகவும், உலகில் ஏதோ ஒரு மூளையில் இருந்துகொண்டு, நமது விரல் நுனிக்குள் விடயங்கள்அனைத்தையும் கொண்டு வருவதங்கான சிறந்ததோர் யுக்தியாகவும் இத்தொலைத்தொடர்பு காணப்படுகின்றது.

இதேவேளை இத்தொலைத்தொடர்புகள் மனித வாழ்வை மேம்படுத்தும் அதேவேளை, தவறான உபயோகத்தின் விளைவாக பல தீமைகளையும் எமக்கு தருகிறது. இணையமோ, தொலைத்தொடர்புகளோ மனித வாழ்வை  மேம்படுத்துவதற்காகவே தவிர, சீரழிப்பதற்காக அல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர்வு ரீதியாக அறிந்து செயற்படவேண்டியது அவசியமாகும்.