இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அவசரகால நிலைமைகளுக்கு மத்தியில் பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளுக்கு ரூபா 260 கோடி நிதி உதவியை ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் சீன அரசாங்கம் வழங்கியதுடன், பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடி ரூபா பெறுமதியான 100 ஜீப் வண்டிகளை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கும் இணக்கம் தெரிவித்தது.

சீனாவுக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான விஜயத்தின் போதே சீன அரசாங்கம் குறித்த தொகையை வழங்குவதாக இணக்கம் தெரிவித்தது.

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்குமான ஒத்துழைப்பை மேம்படுத்தி நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (16) காலை நாடு திரும்பினார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனக்கும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிஙக்குமிடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ கலந்துரையாடல் வெற்றிகரமானதாக அமைந்திருந்தது. பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சீனா இலங்கைக்கு வழங்கும் என சீன ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

மேலும் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அவசரகால நிலைமைகளுக்கு மத்தியில் பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளுக்கு ரூபா 260 கோடி நிதி உதவியை ஜனாதிபதி அவர்களின் கோரிக்கையின் பேரில் சீன அரசாங்கம் வழங்கியதுடன், பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடி ரூபா பெறுமதியான 100 ஜீப் வண்டிகளை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கும் இணக்கம் தெரிவித்தது.

பயங்கரவாத நோக்கங்களுக்காக இணையத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு சீனாவின் உதவியை பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கையின் பாதுகாப்புத் துறையின் மூலோபாய ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு தேவையான உதவியை வழங்குவதற்கும் உடன்பாடு காணப்பட்டதுடன், இலங்கையின் தற்போதைய சவால்களுக்கு தீர்வாக இனவாத பிரசாரங்கள், போலி தகவல்கள் பரப்பப்படுதல் குறித்த செயற்பாடுகள் மற்றும் இணைய குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மென்பொருளுடன் கூடிய தொழிநுட்ப உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கும் சீனா இணக்கம் தெரிவித்திருப்பது ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நன்மையாகும்.

ஜனாதிபதிக்கும் சீன பிரதமர் லீ குவெங்க்குமிடையில் பீஜிங் நகரில் இடம்பெற்ற சந்திப்பின்போது பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சீனா இலங்கையுடன் கைகோர்த்திருப்பதாக சீன பிரதமர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் அதிக சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதுடன், இலங்கையில் சீனா பாரிய முதலீடுகளையும் செய்துள்ளது. அரச தலைவர் என்ற வகையில் நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையை மிகவும் சிறப்பாக முகாமைத்துவம் செய்துள்ள நிலையில் இலங்கையில் முதலீடு செய்துள்ள மற்றும் முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இந்த அனைத்து சந்திப்புகளின்போதும் விளக்கமளித்தார்.

இதேநேரம், பீஜிங் நகரில் ஆரம்பமான ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, பயங்கரவாதத்தை உலகிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கைகோர்க்க வேண்டுமென உலகத் தலைவர்கள் முன்னிலையில்  தெரிவித்தார்.

பயங்கரவாத சவாலுக்கு முகங்கொடுத்து அதற்கெதிராக விரிவானதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ள அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியின் உரை மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 47 நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட சுமார் இரண்டாயிரம் பிரதிநிதிகளின் விசேட கவனத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 ஜனாதிபதிவுடனான சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் –

அமைச்சர் தயா கமகே 

சீனாவுக்கான இந்த விஜயம் எமது நாட்டுக்கு கிடைக்க பெற்றவொரு அரிய சந்தர்ப்பமாகும் என நான் நம்புகின்றேன். இதன்போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதோடு, நாட்டுக்கு தேவையான நவீன தொழிநுட்பம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டதிட்டங்களை மேம்படுத்துவதற்காக 2500 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவியை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது.

அத்தோடு எமது ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய பொலிஸ் திணைக்களத்திற்கு 100 ஜீப் வண்டிகளைப் பெற்றுக்கொடுக்கவும் சீனா இணக்கம் தெரிவித்திருக்கின்றது. தற்போது எமது நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கை 70 சதவீதம் வரையில் வீழ்ச்சி கண்டிருப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து மீண்டு, விரைவில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக சீன நாட்டு பிரதி சுற்றுலாத்துறை அமைச்சரை இலங்கைக்கு வருகைத்தருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றோம். அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். 

ஆகையினால் சீன நாட்டு சுற்றுலா பிரயாணிகள் வெகுவிரைவில் முன்பு போலவே இலங்கைக்கு வருகைத் தருவார்கள் என நான் நம்புகின்றேன். மேலும் எதிர்காலத்திலும் எமது நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் எமக்கு வழங்கவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது. எனவே சீனாவுக்கான இந்த விஜயம் மிக வெற்றிகரமானதாக அமைந்திருந்தது என நான் கருதுகின்றேன்.  

இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க 

ஆசிய நாகரிகங்கள் பற்றிய மாநாட்டுக்கு சமாந்தரமாக, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், எமது நாட்டின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக எமது மேன்மைதங்கிய ஜனாதிபதிக்கு விசேட அழைப்பொன்றினை விடுத்திருந்தார். இதன்போது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்பான எமது தேவைகள் என்ன என்பதை பற்றி முதலில் எமது ஜனாதிபதி எடுத்துக்கூறினார். 

எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட சீன ஜனாதிபதி, 100 மில்லியன் யுவான் நிதியுதவியை உடனடியாக வழங்க இணக்கம் தெரிவித்ததோடு, அதற்கு மேலதிகமாக எமக்கு வழங்கக்கூடிய நிதியுதவிகளைப் பற்றி உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் எமக்கு அறியத்தருவதாக தெரிவித்ததோடு பொலிஸ் திணைக்களத்திற்கு 100 ஜீப் வண்டிகளைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

அத்தோடு விமான நிலையங்களின் பாதுகாப்பிற்கு தேவையான உபகரணங்களைப் பெற்றுத்தர இணக்கம் தெரிவித்த சீன ஜனாதிபத, சீனாவுடன் எமது நாட்டுக்கு இருந்துவரும் நீண்டகால உறவை மேலும் பலப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். சீன ஜனாதிபதியுடனான அந்த கலந்துரையாடல் மிக வெற்றிகரமானதாக அமைந்தது.

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்க்கும் எமது ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்தமை குறிப்பிடத்தக்கதாகும். உலக பலசாலிகளுள் ஒருவரை எமது ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடி நமது நாட்டுக்கு தேவையான உதவிகளையும் எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான உத்தரவாதத்தையும் பெற்றுக்கொள்ள முடிந்தமை ஒரு நாடு என்ற வகையில் நாம் பெற்றுக்கொண்ட வெற்றியாகும். 

அதனைத் தொடர்ந்து சீன பிரதமருடனான சந்திப்பு இடம்பெற்றது. அவரும் மேற்படி தீர்மானங்களை உறுதிப்படுத்தியதோடு, பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சிறுநீரக மருத்துவமனை குறித்தும் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக சுற்றுலா பிரயாணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பற்றியும் கலந்துரையாடினர். வருடாந்தம் சுமார் மூன்று இலட்சம் சீன சுற்றுலா பிரயாணிகள் இலங்கைக்கு வருகைத்தருவதாகவும் எதிர்காலத்தில் அதனை மேலும் அதிகரிப்பதற்கு சீன அரசாங்கத்தின் சார்பில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 

ஜனாதிபதியின் சீனாவுக்கான மூன்று நாள் விஜயத்தின் மூலம் இலங்கை ஒரு நாடு என்ற வகையிலும் ஒரு சமூகம் என்ற வகையிலும் சில முக்கியமான வெற்றிகளை பெற்றுக்கொண்டுள்ளது என்பதே எனது எண்ணமாகும். பாதுகாப்பு சம்பந்தமாக சீன அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தம் வாயிலாக தகவல் சேகரிப்பு மற்றும் அதிநவீன முறைகளில் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வது இவற்றுள் மிக முக்கியமானதாகும். 

சுமார் 05 பில்லியனுக்கும் அதிகமான உதவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு உடனடியாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சீன ஜனாதிபதியுடன் எமது ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட பேச்சுவார்த்தை காரணமாகவே அவற்றை உடனடியாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

அத்தோடு தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தோற்கடிப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படவும் சவால்களை எதிர்கொள்ளவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இலங்கையின் கேந்திர முக்கியத்துவமிக்க பூகோள அமைவு காரணமாக இங்கிருந்தும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் வேறு நாடுகளுக்கு பரவக்கூடும் என்ற அச்சம் இருப்பதனால் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் இலங்கை மக்களை பாதுகாத்துக் கொள்வதற்குமான முன்னேற்பாடாகவே இந்த உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் இது ஒரு வெற்றிகரமான விஜயமாகும் என்றே நான் கருதுகின்றேன்.

தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன்.

ஜனாதிபதி அமைச்சரவை அமைச்சர்களுடனும் ஆளுநர்களுடனும் இணைந்து சீனாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாங்கள் எதிர்பார்த்த குறிக்கோள்களை இந்த சுற்றுப்பயணத்தின்போது வெற்றிகொள்ள முடிந்துள்ளது. சீன ஜனாதிபதி, சீன பிரதமர், பாதுகாப்புத்துறையினர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த துறையினருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது. 

அத்தோடு இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான தொழிநுட்ப உதவிகள், நிதியுதவிகள், இலத்திரனியல் உபகரணங்கள், மென்பொருட்கள் ஆகியவற்றை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் எமக்கு கிடைத்துள்ளது. 

சீனா பயங்கரவாதம், இனவாதம், மதவாதம் போன்றவற்றை தோல்வியடையச் செய்த ஒரு இராச்சியமாகும். அவர்களது அந்த அனுபவங்கள், கையாண்ட உத்திகள் மற்றும் பயன்படுத்தும் உபகரணங்கள், மென்பொருள் உள்ளிட்ட தொழிநுட்ப அறிவை இலங்கையுடன் பகிர்ந்து கொள்வதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடிந்திருக்கின்றது. 

அத்தோடு இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கும் பாதுகாப்புத் துறையினருக்கும் தேவையான 100 ஜீப்வண்டிகளை சீனா எமக்கு வழங்கியிருக்கின்றது. இனவாதத்தைத் தூண்டும் பிரசுரங்கள் பகிர்ந்தளித்தல், போலியான தகவல்களை பரப்புதல் ஆகிய விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான மென்பொருள்கள் இந்த சுற்றுப்பயணத்தின் பிரதிபலனாக இலங்கைக்கு கிடைத்துள்ளது.

அத்தோடு இதுவரை கலந்துரையாடப்பட்டுவந்த இலங்கையின் கரையோரப் பாதுகாப்பிற்கும் போதைப்பொருள் தடுப்பிற்கும் தேவையான கப்பல் எதிர்வரும் மாதத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது இலங்கை பாதுகாப்புத் துறையினர் வசம் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு தேவையான தொழிநுட்ப கருவிகளில் பற்றாக்குறை இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 

மென்பொருள் மற்றும் வாகனங்களுக்கான பற்றாக்குறையும் காணப்பட்டது. இந்த அசாதாரண சூழ்நிலையை வெற்றிக்கொள்வதற்கு தேவையான அறிவையும் தொழிநுட்பத்தையும் இலங்கையின் நட்பு நாடான சீனா பெற்றுக்கொடுத்துள்ளது. கடந்தகால யுத்தத்தின்போது இக்கட்டான சூழ்நிலைகளில் எல்ரீரீஈ. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு சீனா தொழிநுட்ப உதவிகளை எமக்கு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய நிதி மற்றும் வளங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சுற்றுப்பயணத்தின் பலனாக 5 பில்லியனுக்கும் மேற்பட்ட கருவிகளும் உபகரணங்களும் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளன