(எம்.எப்.எம்.பஸீர்)

வடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் குளியாபிட்டி, நிக்கவரட்டி மற்றும் சிலாபம் பொலிஸ் வலயங்களில் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டோரையும் அவற்றை திட்டமிட்டவர்களையும் கைதுசெய்யும் பணியில் உளவுத் துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களுக்கு மேலதிகமாக கம்பஹா, மினுவங்கொடை பகுதிகளில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களை தாக்கிய விவகாரம் தொடர்பிலும்  உளவுத்துறையினர் சூத்திரிகளை கைதுசெய்யும் பொறுப்பை ஏற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந் நிலையில் வட மேல் மாகாணத்தில்  தற்போது நிலவும் அமைதியான சூழலை மையப்படுத்தி, அம் மாகாணத்துக்கு தொடர்ச்சியாக பிறப்பிக்கப்பட்டுவந்த ஊரடங்கு சட்டம் இன்று முதல் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. 

எனினும் வட மேல் மாகணத்தின் பாதுகாப்புக்காக தொடர்ந்து பொலிசாரும், பொலிஸ் அதிரடிப்படையினரும் முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் வடமேல் மாகணத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நண்பகல் வரை 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மினுவாங்கொடை வன்முறைகள் தொடர்பில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.