(ஆர்.யசி)

கடந்த 12,13 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தாக்குதல் இராணுவத்தின் கண்காணிப்பிலோ அல்லது இராணுவத்தின் உதவியுடனோ நடத்தப்படவில்லை. குறித்த  சி.சி.ரி.வி வீடியோ காணொளிப்பதிவுகளை ஆராய்ந்ததில் 95 வீதம் இராணுவத்தின் மீது குற்றமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்தார். 

இராணுவ தளபதி தலைமையில் இன்று இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. எனினும் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்களை கடந்த நிலையில் தற்போது அதாவது 12, 13 ஆம் திகதிகளில் நாட்டில் சில பகுதிகளில் சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றது. இன்று அது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் தற்போது தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. தேசிய பாதுகாப்பு குறித்து பல தடவைகள் நானே உறுதியளித்துள்ளேன். இப்போதும் அதையே கூறுகின்றேன். தேசிய பாதுகாப்பில் எந்த அச்சமும் இல்லை. மக்கள் அச்சமின்றி நடமாட முடியும். 

கடந்த 12,13 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் இராணுவத்தின் அனுமதியுடன் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படுகின்றது, சில சி.சி.ரி.வி காணொளிகள் குறித்து  ஆராய்ந்தோம். இதில் இராணுவ அதிகாரிகள் தாக்குதலுக்கு துணைபோனதாக எந்த பதிவுகளும் இல்லை. இந்த விசாரணைகளில் 95 சதவீமா இராணுவத்தினர் மீது தவறுகள் இல்லை என்ற உறுதியாகியுள்ளது. குறிப்பாக ஒரு காணொளி பதிவில் மட்டும் ஒரு இராணுவ வீரர் கையை அசைத்து ஒரு சிலரை வரவழைப்பது போன்று பதிவாகியுள்ளது. அதனால் தான் இந்தக் கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் அந்த வீடியோவை பெரிய திரையில் பார்த்தோம், அந்த ஒரு சி.சி.ரி.வி பதிவு மட்டும் அல்ல இன்னும் இரண்டு பதிவுகளும் உள்ளது. அவை மூன்றையும் பார்க்கையில் உண்மைகள் தெரியவரும். குறித்த இராணுவ வீரர் தனது தோளில்  போட்டிருந்த துப்பாக்கியை சற்று  இலகுபடுத்தி மீண்டும் தோளில்  போடுவதே அந்தக் காட்சி. அதை ஒரு திசையில் இருந்து பார்க்கும் போது உரிய இராணுவ வீரர் கை அசைத்து யாரையோ அழைப்பது போன்று உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. 

அத்துடன் இராணுவம் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், கைதுசெய்ய வேண்டும் எனவும் இராணுவ தளபதியாக நான் கட்டளை பிரப்பித்துள்ளேன். இராணுவம் வீதிகளில் நின்று வாகனங்களை நிறுத்த கையை அசைத்தால் யாராக இருந்தாலும் வாகனத்தை நிறுத்த வேண்டும். நிறுத்தவில்லை என்றால் சுடுவோம். அதேபோல் இராணுவம் என்றவுடன் ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என்ற அர்த்தம் கொள்ள வேண்டாம். முடிந்தளவு நாம் எமது பலத்தை குறைத்துகொண்டு  இலகுவாக பிரச்சினைகளை தீர்க்கவே முயற்சிக்கின்றோம். ஆயுதங்களை பயன்படுத்தாது பிரச்சினைகளை கட்டுபடுத்த வேண்டும் என்ற நோக்கம் எமக்கு உள்ளது. எல்லை மீறும் நிலையிலேயே எம்மால் ஆயுதங்களை பயன்படுத்த முடியும்.

அதேபோல் சந்திக்கு சந்தி எம்மால் இராணுவத்தை குவிக்க முடியாது. பொலிஸ் அதிகாரங்கள் உள்ளது. அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். இராணுவம் முஸ்லிம்களை பாதுகாக்கவில்லையா என்பதை நீங்கள் முஸ்லிம் சமூகத்திடமே நீங்கள் கேளுங்கள். இராணுவம் ஒருபோதும் தாக்குதலை நடத்தவோ தாக்குதலை வேடிக்கை பார்க்கவோ இல்லை என்றார்.