(நா.தனுஜா)

ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பெருமளவான சிக்கல்கள் எழுந்துள்ளன. 

அதேபோன்று பொருளாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 11 யோசனைகளை முன்வைத்துள்ளதுடன், அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இன்னமும் ஒரு மாதகாலத்திற்குள் அந்த யோசனைகளை சட்டங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், எதிர்காலத்தில் இத்தகைய மோசமான தாக்குதல் சம்பவங்கள் ஏற்படாது தடுத்தல், இனங்களுக்கிடையில் முறுகல்நிலை ஏற்படுவதைத் தவிர்த்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அதில் எதிர்க்கட்சியின் அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளருமான மஹிந்த அமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன ஆகியோர் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இதனை சுட்டிக்கட்டியுள்ளனர்.