இதய செயலிழப்பை டாஷ் டயட் ( DASH Diet) என்ற உணவு முறை, கட்டுப்படுத்துவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்றைய திகதியில் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தால் எம்முடைய உணவு முறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன. எம்மில் பலரும் தங்களுக்கு ஏற்ற உணவு முறையை பின்பற்றி வருகிறார்கள். இதன் காரணமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்புகளும், அதன் அறிகுறிகளும் ஏற்படுகின்றன. 

இதற்கு இரத்த அழுத்தம், உயர் குருதி அழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன் என பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்நிலையில் மருத்துவத்துறையில் அண்மையில் அறிமுகமாகி பிரபலமாகியிருக்கும் டாஷ் டயட் எனப்படும் உணவு முறை, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய செயலிழப்பையும் கட்டுப்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள்.

இந்த டாஷ் உணவு முறையில், நிறைய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்பு சத்து கொண்ட பால்மா பொருட்கள், மீன், இறைச்சி, முந்திரி பாதாம் போன்ற பருப்பு வகைகள், மற்றும் பீன்ஸ் ஆகியவை முக்கியமாக இடம் பெற்றிருக்கின்றன.

இத்தகைய உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. பிறகு இதயத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இரத்தத்தில் ஒக்சிஜனின் சதவிகிதம் சமநிலையாக பராமரிக்கப்படுகிறது. இரத்த குழாய்களில் அதிக அளவு கொழுப்புபடிவதும் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இதயத்திற்கு இரத்தம் செல்வது சீராக்கப்படுகிறது. 

சிலருக்கு இதயத் துடிப்பு சீராக இருக்கும். ஆனால் இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவில் மாறுபாடு ஏற்படும் இதன் காரணமாக அவர்கள் விரைவில் இதய செயலிழப்பை (ஹார்ட் பெயிலியர்) சந்திக்க நேரிடும். அவர்கள் இந்த உணவு முறையை பின்பற்றத் தொடங்கினால் நாளடைவில் இதய செயலிழப்பை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக 60 வயது முதல் எண்பது வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த உணவு முறை அதிகப்படியான பலன்களை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

டொக்டர் அனந்தகிருஷ்ணன்

தொகுப்பு அனுஷா.