தெருவோரத்தில் நள்ளிரவில் இறந்து கிடந்த  நரிக்கு அவசர அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு அதன்  வயிற்றிலிருந்த  4 நரிக் குட்டிகளை விவசாயியொருவர் வெளியேற்றி காப்பாற்றிய விநோத சம்பவம் பிரித்தானியாவில் சஸக்ஸ் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. 

சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற இது தொடர்பான தகவல்கள் அந்நாட்டு ஊடகங்களில் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

 கிறிஸ் ரொல்ப் (24 வயது) என்ற விவசாயியே இவ்வாறு நரிக்குட்டிகளை காப்பாற்றியுள்ளார். அவர் காரில் பயணித்த வேளை தெருவோரத்தில் குறிப்பிட்ட  நரியைக் கண்டு காரை நிறுத்தியுள்ளார்.

 இதன்போது அந்த நரி இறந்திருந்த போதும் அதன் வயிற்றிலிருந்த குட்டிகள் அசைவதை அவதானித்த கிறிஸ்,  தனது காரிலிருந்த கத்தியொன்றை எடுத்து வந்து தாய் நரியின் வயிற்றைக் கிழித்து நான்கு குட்டிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார்.

கிறிஸ்  மிருக வைத்திய பயிற்சி எதனையும் பெறாத போதும் இதற்கு முன்னர்   ஆடுகள் குட்டிகளை ஈனும் காலத்தில்  ஆடொன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில் பங்கேற்றிருந்தார்.

கிறிஸின் தாயாரான  ஜீன் (51 வயது) முன்னர்  நரிகளை பராமரிக்கும்  தொண்டு ஸ்தாபனமொன்றில் பணியாற்றியவர் என் பது குறிப்பிடத்தக்கது.