கிரிக்கெட் அரங்கில் சர்வதேச ஒருநாள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஐ.சி.சி.யின் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது ஆரம்பமானது.

இத் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணி அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதலாவதாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

* கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் 8 மைதானங்களில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 07 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெற்றது.

* இப் போட்டியில் பங்கேற்ற அணி வீரர்கள் வெள்ளை நிற ஆடையுடன் டெஸ்ட் போட்டியை போன்று களமிறங்கினர்.

* 8 அணிகள் கலந்து கொண்டது (குழு 'A'யில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியவும், குழு 'B'யில் அவுஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் பகிஸ்தான்)

*  15 நாட்கள் இடம்பெற்ற இத் தொடரில் 15 போட்டிகள் இடம்பெற்றன.

*  60 ஓவர்கள் அடிப்படையில் உலக கிண்ணம் நடத்தப்பட்டது.

*  கிண்ணத்தின் பெயர் - ப்ருடென்ஷியல்

1975 ஜூன் மாதம் 07 ஆம் திகதி குழு ஏ, குழு பி யில் இவ் விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் 4 போட்டிகள் இடம்பெற்றன. 

இதில் குழு ஏ யின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 60 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் குவித்து 202 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

குழு ஏ யின் இரண்டாவது லீக் போட்டியில் நியூஸிலாந்து - கிழக்கு ஆப்பிரிக்கா மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 60 ஓவர்களின் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 309 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கிழக்கு ஆபிரிக்க அணி 60 ஓவர்களின் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 181 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இதேவேளை குழு பி யின் முதல் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 60 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 53 ஓவர்களை எதிர்கொண்டு 205 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

குழு பி யின் இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை - மேற்கிந்திய அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 37.2 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 86 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 87 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20.4 ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

1975 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி குழு ஏ மற்றும் குழு பி யில் இவ்விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றது.

குழு ஏ யின் மூன்றாவது லீக் போட்டியில் நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 60 ஓவர்களின் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 80 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

குழு ஏ யின் நான்காவது லீக் போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்கா - இந்தியா மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு ஆப்பிரிக்கா 55.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 120 ஓட்டங்களை பெற, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா 29.5 ஓவர்களில் எதுவித விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது.

இதேவேளை குழு பி யின் மூன்றாவது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 60 ஓவர்களின் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 328 ஓட்டங்களை குவிக்க, இலங்கை அணி 60 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களை மாத்திரம் குவித்து, 52 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

குழு பி யின் நான்காவது லீக் போட்டியில் பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் மோதின. இப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 60 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்களை குவித்தது. 267 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 59.4 ஓவரில் 9 விக்கெட்டினை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

1975 ஜூன் 14 ஆம் திகதி குழு ஏ மற்றும் குழு பி யில் இவ்விரு போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றது.

குழு ஏ யின் ஐந்தாவது லீக் போட்டியில் இங்கிலாந்து - கிழக்கு ஆப்பிரிக்கா மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிழக்கு ஆப்பிரிக்கா 52.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 196 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

ஆறாவது லீக் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 60 ஓவர்களின் நிறைவில் 230 ஓட்டங்களை குவிக்க. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 58.5 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.

குழு பி யின் ஐந்தாவது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 53.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 46 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

குழு பி யின் ஆறாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 60 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை குவிக்க இலங்கை அணி 50.1 ஓவரை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 192 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. 

லீக் ஆட்டம் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் குழு ஏ யில் இங்கிலந்து, நியூஸிலாந்து அணியும், குழு பி யில் அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்  தீவுகள் அணியும் அரையிறுதிப் போட்டியில் நுழைந்தன.

1975 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் திகதி இரு அரையிறுதிப் போட்டிகளில் இடம்பெற்றன.

முதலாவது இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 94 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 28.4 ஓவரில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலியா அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து - மேற்கிந்தியத்தீவுகள் மோதின. முதாலவதாக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 52.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை குவிக்க, 159 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 40.1 ஓவரில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, வெற்றியிலக்கை அடைந்தது.

இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி நியூஸிலாந்தை வீழ்த்தி இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் கிளைவ் லோயிட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியும், இரான் சேப்பல் தலைமையிலான இங்கிலாந்து அணிகளும் மோதின. 

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 60 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்களை எடுத்தது. அணித் தலைவர் கிளைவ் லோயிட் 102 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.

103 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 58.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 274 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 17 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. அவுஸ்திரேலிய அணி சார்பகா இயன் சாப்பல் அதிகபடியாக 62 ஓட்டங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. 

* அதிகபடியான ஓட்டம் - நியூஸிலாந்து அணியின் கிளேன் டர்னர் (‍ 4 போட்டிகளில் 333 ஓட்டம்)

* அதிகபடியான விக்கெட் - அவுஸ்திரேலிய அணியின் கேரி கில்மோர் ( 2 போட்டிகளில் 11 விக்கெட்)

(தொகுப்பு : ஜெ.அனோஜன்)