(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமைகளால் எதிர்வரும் மாதங்களில் இடம்பெறவுள்ள பரீட்சைகள் ஒருபோதும் பிற்போடப்பட மாட்டாது எனத் தெரிவித்த இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள தரம் ஐந்திற்கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை என்பனவும் அட்டவணைப் படி உரிய திகதிகளில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர்குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இருவார காலம் தாமதமாகவே ஆரம்பமானது. எனினும் மாணவர்களின் வருகையும் மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. இந்நிலையில் இரண்டாம் தவணைக்கான பாடங்களை உரிய நேரத்திற்குள் முடிப்பதோடு, பரீட்சைகளை நடத்துவது சாத்தியமாகுமா என்பது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.