மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம்  யூட் வீதியில் வசித்து வந்த 12 வயது சிறுவன் கடந்த 12 ஆம் திகதி தனது வீட்டில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பொலிஸார் சடலத்தைத மீட்டபோது குறித்த சிறுவன் எழுதி வைத்த கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அந்த கடிதம் கடந்த 08-05-2019 அன்று திகதி இடப்பட்டு எழுதப்பட்டுள்ளதோடு, தனக்கும் தனது தந்தைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், தான் கேட்பவை எவற்றையும் வாங்கித்தருவது இல்லை எனவும், தந்தை 2 ஆம் திருமணம் முடித்தது தனக்கு பிடிக்கவில்லை எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா சென்றால் அங்கே தன்னை நன்றாக கவனிப்பார்கள் எனவும், நான் இந்தியா செல்கின்றேன் எனவும் மேலும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் தாயார் இறந்த நிலையில் அவனுடைய தந்தை மறுமனம் செய்ததாக தெரிய வருகின்றது.

சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின் பிரேத பரிசோதனையின் பின் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறுவனின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக சிறுவனின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.