(எம்.எப்.எம்.பஸீர்)

இன்றிரவு 7.00 மணியுடன் நிறைவடைந்த 72 மணி நேரத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மினுவாங்கொடை பகுதியில் பள்ளிவாசல் மற்றும் கடைகளை கொளுத்தி சேதப்படுத்தியமை தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் இன்று மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வட மேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் மொத்தமாக 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 9 பேர் நேரடியாக வன்முறைகளில் பங்கேற்ற முக்கியமானவர்களாவர். அந்த 9 பேரும் ஹெட்டிபொலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு, எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குளியாபிட்டிய வன்முறைகளுடன் தொடர்புடைய 10 பேரும் கைதுசெய்யப்பட்டு குளியாபிட்டிய நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு, எதிர்வரும்  27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் 18 பேர் கைதுசெய்யப்பட்டு மாரவில நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந் நிலையில் கொடூர தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளைக் கையாளும் பொலிஸ் தலைமையகத்தின் சிறப்பு பொலிஸ் குழு அது தொடர்பில் பல தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. 

வன்முறைகளில் பங்கேற்றவர்களை பிடிக்க, பதில் பொலிஸ் மா அதிபர் அமைத்துள்ள வெவ்வேறு சிறப்பு விசாரணை அதிகாரிகளின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதனிடையே இந்த வன்முறைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர்களாக கருதப்படும் மூன்று சந்தேக நபர்களும் ஏற்கனவே இனவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அதில் பிரதானமாக மஹசொன் பலகாய எனும் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க , கண்டி திகன வன்முறைகளின் பிரதான சூத்திரதாரியாக கருதப்பட்டு கைதுசெய்யப்பட்டவர் ஆவர். அது தொடர்பில் 7 மாதங்கள் விளக்கமறியலில் இருந்த அவர் கடந்த 2018 ஒக்டோபர் 31 ஆம் திகதியே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

டேன் பிர்யசாத் எனும் சந்தேக நபரும்,  கல்கிசை பகுதியில் இடம்பெற்ற ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத போராட்டத்தின் போது பிரதான சந்தேக நபராக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் ஏற்கனவே கைதாகி தற்போது அது தொடர்பில் பிணையில் உள்ளவராவார்.

நாமல் குமார எனும் நபர் இவ்விரு இனவாதிகளுடனும் மிக நெருக்கமாக பழகியவர் ஆவார்.