மிஸ்டர் லோக்கல் படத்தில் எம்முடைய இரண்டு நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக அப்பட நாயகனும் முன்னணி நடிகருமான சிவகார்த்திகேயன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 

“மிஸ்டர் லோக்கல் ஒரு இனிமையான எளிமையான பொழுதுபோக்கு படம். நான் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் போது. இயக்குனர் ராஜேஷ் இயக்கிய ‘சிவா மனசுல சக்தி’ என்ற படத்தில் ஒரு சிறிய காட்சிக்காக ரஜினிகாந்த் போல் பின்னணி பேசியிருப்பேன். அதுமுதல் நான் இயக்குனர் ராஜேஷ் சாரை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்கு பிறகு அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் ஒருங்கிணைத்த திரைப்படம் தான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் ’ . எம்முடைய உதவியாளர் பொன்ராம் திறமையானவர். அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்லி, எங்கள் எல்லோரையும் ஒருங்கிணைக்க வைத்து வெற்றி பெற்ற செய்தவர். அப்போதும் அவரிடம் நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று சொன்னேன். அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்தது. மிஸ்டர் லோக்கல் என்ற படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது.

வேலைக்காரன் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தேன். படத்தை பார்த்த அனைவரும் நயன்தாராவிற்கு கூடுதலாக திரை வாய்ப்பு கொடுத்திருக்கலாம். நீங்களும் அவரும் இணைந்து மேலும் பல காட்சிகள் வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். அவர்களின் கனவும் இந்தப் படத்தில் நிறைவேறி இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தனா வாசுதேவன் என்ற கதாபாத்திரத்தில் எமக்கு சமமாக தோன்றி நடித்திருக்கிறார்.” என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

ஆனால் திரையுலகில் மிஸ்டர் லோக்கல் பற்றி, ‘ஒன்றுக்கு நான்கு’ என்று பூடகமாக பேசிக்கொள்கிறார்கள். என்னவென்று விசாரிக்கும் பொழுது, ராஜேஷ் படத்தில் ஒரே ஒரு சந்தானம் இருப்பார்.

ஒட்டு மொத்த படமும் கொமடியாக இருக்கும். ஆனால் மிஸ்டர் லோக்கல் படத்தில் சந்தானம் என்ற ஒருவருக்கு பதிலாக, ரோபோ சங்கர், யோகி பாபு, சதீஷ், சிவகார்த்திகேயன் என நான்கு நடிகர்கள் கொமடி செய்திருக்கிறார்கள்.’ என்கிறார்கள். எனவே இந்த படம் வெற்றி பெறும் என்றும் உறுதியாக தெரிவிக்கிறார்கள். ரசிகர்களும் இதை மே 17 ஆம் திகதியன்று ஆமோதிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.