சட்டத்தை எவரும் கையில் எடுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர் சி.பி.விக்ரமரட்ண, அதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையினை கருத்திற்கொண்டு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே இன, மத மோதல்களை ஏற்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

யாராவது தொடர்ந்தும் குழப்பைத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு பிணை வழங்க முடியாத வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அது மாத்திரமன்றி தேவை ஏற்படின் 10 வருடங்கள் அவர்களை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்

30 வருட யுத்தத்தை நிறைவு செய்த பொலிஸ் உள்ளிட்ட படையினாரால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பது ஒரு சிறிய விடயம்.

ஆகவே எவரும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது, அவ்வாறு மீறி சட்டத்தை கையில் எடுத்தால் அவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.