(ஆர்.யசி) 

அரசாங்கத்தில் இருந்து வெளியேறவோ அல்லது அமைச்சை துறக்கவோ எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சர் பதவியை துறக்கவுள்ளதாகவும் புதிய அரசியல் பயணமொன்று உருவாக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் அது குறித்து அவரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் தெளிவுபடுத்துகையில், 

அரசாங்கத்தில் இருந்து வெளியேறவோ அல்லது அமைச்சை துறக்கவோ எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. எனினும் சில விசேடமான திட்டங்களை வகுத்து அதற்கமைய ஒரு இயக்கமாக உருவாகும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலையில் பயங்கரவாதமற்ற தேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய  தேவை உள்ளது. அதற்கான புதிய அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டியுள்ளது. 

இது அரசியல் மாற்றத்தை உருவாக்க ஏற்படுத்தும் கூட்டணி அல்ல. பயங்கரவாதமற்ற நாட்டினை கட்டியெழுப்ப அணிதிரளும் அனைவருக்கும் தேசத்திற்கான  வழி என்ற  இந்த மக்கள் இயக்கத்தில் இணைந்துகொள்ள முடியும், அதேபோல் இந்த செயற்பாடுகளை தடுக்கும் அனைவரையும் அரசியலில் இருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையும் முன்னெடுப்போம் என்றார்.