(நா.தனுஜா)

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விசாரணை செய்யும் அதிகாரத்தை இராணுவத்துக்கு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மேலும், குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக பிரபலமான நபர்களின் தொடர்புடைய சந்தேக நபர்கள் இலகுவில் பிணையில் வெளிவந்து, சில நாட்களிலேயே வெளிநாட்டிற்குச் சென்றுவிடுகிறார்கள். 

இவ்வாறான நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு கைது செய்யப்பட்டவர்களை விசாரணை செய்யும் அதிகாரத்தை இராணுவத்திற்கு வழங்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்கள். எம்முடைய நாட்டில் சட்டங்கள் போதாது என்பதல்ல பிரச்சினை. அவற்றைப் பிரயோகிப்பதில்லை என்பதே முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.