முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறி இருக்கின்ற சிங்கள மக்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கொக்கிளாய் முகத்துவாரம் மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கென தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அடிக்கல் நாட்டுவதற்கு முற்பட்ட வேளை அந்த விடயம் தடுத்து நிறுத்தப்பட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு  மாவட்ட  செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாட மாவட்ட செயலகத்துக்குள் நுழைய முற்பட்ட போது மாவட்ட செயலக வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து போலிசார் சென்று மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடி 3 பேரை கலந்துரையாட அனுமதித்தனர்  சுமார் ஒரு மணிநேர கலந்துரையாடலை தொடர்ந்து இருக்கின்ற சிக்கல் நிலைமைகளை கூறி ஒருவார கால அவகாசத்தில் இதற்கான தீர்வு தொடர்பில் தெரிவிப்பதாக தெரிவித்து இருந்ததாகவும் இருப்பினும் மக்களுடன் கலந்துரையாடுமாறு மக்கள் கேட்டதற்கு இணங்க மாவட்ட செயலாளர் போராட்ட காரர்களை  வந்து சந்தித்து  குறித்த விடயத்தை தெரிவித்தார்.

இதனை ஏற்க முடியாதெனவும் உடனடியாக தீர்வு வேண்டுமெனவும் அரச அதிபரை மக்கள் கடும் தொனியில் எச்சரிக்கை மாவட்ட செயலாளர் குறித்த இடத்தை விட்டு சென்றார் .

இருப்பினும்போராட்ட காரர்களது பிரதிநிதிகள் மாவட்ட செயலாளரை சந்திக்க சென்ற வேளையில் இருந்து   ஏனைய மக்கள் மாவட்ட செயலக வாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இருப்பினும் போலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இறுதியில் மாவட்ட செயலாளரை மீண்டும் சந்தித்த பிரதிநிதிகள் மாவட்ட செயலாளர் இன்று மாலை குறித்த இடத்துக்கு நேரில் வருகைதருவதாக அளித்த உறுதிமொழியை தெடர்ந்து போராட்ட காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.