(எம்.ஆர்.எம்.வஸீம்)

அவிசாவளை, புவக்பிட்டி தமிழ் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான செய்தியை சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாக வெளியிட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அவிசாவளை புவக்பிட்டியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையில் 12 முஸ்லிம் ஆசிரியைகள் கடமையாற்றி வருகின்றனர். அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்றோது பாடசாலையின் நுழைவாயிலில் இருந்த சிலர் பாடசாலைக்குள் செல்லவிடாது மறித்துள்ளனர். இவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த தினம் ஒரு ஆசிரியரே ஆரம்பமாக பாடசாலைக்கு வந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மறித்து அபாயாவுடன் பாடசாலைக்கு செல்ல முடியாது. சாறி அணிந்து வாருங்கள் என்று தெரிவித்துள்ளனர். அப்போது அந்த இடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி குறித்த ஆசிரியரின் பையை சோதித்துவிட்டு அனுப்புவோம் என தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அங்கிருந்தவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

குறித்த ஆசிரியர் அதிபர் வந்து எனக்கு ஒருவார்தை தெரிவிக்கவேண்டும். அதிபரை வரச்சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு அவர்கள் அதிபருக்கு நாங்கள் பல தடைவைகள் இதுதொடர்பாக அறிவித்திருக்கின்றோம். அதிபர் நடவடிக்கை எடுக்காததால்தான் நாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம் என தெரிவிக்க, குறித்த ஆசிரியர் அந்த இடத்தில் இருந்து சென்று விடுகின்றார். அதன் பின்னர் ஏனைய முஸ்லிம் ஆசிரியர்களும் பாடசாலைக்கு வந்தபோது அவர்களையும் உள்ளே விடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஆனால் இந்த சம்பவத்தை சில சிங்கள ஊடகங்கள் பிழையாக சித்தரித்து செய்தி வெளியிட்டடிருக்கின்றன. அதாவது, குறித்த ஆசிரியர்கள் புர்கா அணிந்து வந்தபோது அவர்களை திருப்பி அனுப்பியதாகவும் ஆளுநர் அசாத் சாலி தலையிட்டு அவர்களை வேறு பாடசாலைக்கு இடமாற்றியதாகவும் தெரிவித்திருக்கின்றது. அத்துடன் குறித்த ஆசிரியர்கள் தங்கள் பைகளை சோதிக்க அனுமதிக்க மறுத்ததாலே இந்த பிரச்சினை ஏற்பட்டதாக அமைச்சர் மனோகணேசனும் அறிக்கையொன்றை விட்டிருக்கின்றார். அவரும் உண்மை நிலையை அறியாமலே அறிக்கை விட்டிருக்கின்றார்.

மேலும் ஊடகங்கள் இந்த  சம்பவம் தொடர்பில் ஒரு தரப்பின் கருத்தை மாத்திரம் பெற்று வெளியிட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட ஆசியர் ஒருவரின் கருத்தை கேட்டிருக்கலாம். அல்லது வலயக்கல்வி அதிகாரி ஒருவரிடம் கேட்டிருக்கலாம். அல்லது குறித்த ஆசிரியர்களை இடமாற்ற நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் என்னிடம் கேட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.