நாட்டில் தற்போது செயல் திறன் மிக்க அரசாங்கம் இல்லாத நிலையில் எந்த விடயத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி.விஜேதாஸ ராஜபக்ஷ வீரகேசரிக்கு வழங்கிய விசேடசெவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- தௌஹீத் ஜமாஅத் அமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 உறுப்பினர்கள் ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்று தாக்குதலுக்கு தயாராகி வருகின்றார்கள் என்ற தகவலை நீங்களே முதலில் வெளிப்படுத்தியிருந்தீர்கள் அந்த தகவல் உங்களுக்கு எவ்வாறு கிடைத்ததது?

பதில்:- தகவல் வழங்கியவர்களின் விபரத்தினை எனக்கு முழுமையாக உங்களிடத்தில் கூற முடியாது. இருப்பினும் சில விடயங்களை பகிர்ந்து கொள்கின்றேன். நாட்டின் புலனாய்வுத்துறை தரப்பினரிடமிருந்தும் முஸ்லிம் சகோதரத்துவ மக்களிடத்திலிந்தும் தான் எனக்கு அந்த தகவல்கள் கிடைத்தன.

குறிப்பாக எனக்கு தகவல் வழங்கிய முஸ்லிம் தரப்புக்கள் மேற்படி தரப்பினரால் ஏதேனும் விபரீதம் நிகழ்த்தப்படுமாயின் தமக்கு பாதகமான சூழல் ஏற்படும் என்று அச்சம் கொண்டிருந்தனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களிடத்திலோ அல்லது முஸ்லிம் பிரதிநிதிகளிடத்திலோ இந்த விடயத்தினைக் கூறினால் அவர்கள் இந்த விடயத்தினை இருட்டடிப்புச் செய்து விடுவார்கள் என்றே கருதினார்கள். அவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. நான் அப்போது நீதி அமைச்சராக இருந்த காரணத்தினால் ஏதாவது செய்வேன் என்ற கருதினார்களோ தெரியவில்லை என்மீது நம்பிக்கை வைத்து அந்த தகவல்களை என்னிடத்தில் பரிமாறினார்கள்.

கேள்வி:- நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான தகவலொன்றைப் பெற்றுக்கொண்டிருந்த நீங்கள் அதனை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்க வேண்டுமெல்லவா?

பதில்:- ஆம், நான் நாட்டின் பிரஜை என்ற அடிப்படையிலும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் என்ற அடிப்படையிலும் இந்த விடயத்தினை அவர்களிடத்தில் வெளிப்படுத்தினேன். பாதுகாப்புத்துறையின் சில தரப்பினருக்கும் கூறினேன். எனினும் அதற்கான பிரதிபலிப்புக்கள் சரியாக இருந்திருக்காமையினால் அமைச்சரவை கூட்டத்தொடரின் போது இந்த விடத்தினை அனைத்து அமைச்சர்கள் முன்னிலையிலும் கூறினேன். குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயத்தினை நான் தெரிவித்தமையால் தர்க்கங்கள் ஏற்பட்டன.

குறிப்பாக அமைச்சர் மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ன, ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டவர்கள் என்னைக் கடுமையாக சாடினார்கள். இனவாதத்தினை கையிலெடுப்பதாக கூறினார்கள். தமக்கு தெரிந்து புலனாய்வு கட்டமைப்புக்கு அவ்வாறான தகவல்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்று கூறினார்கள். அதுமட்டுமன்றி அமைச்சரவைக்கு வெளியே சென்று ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களை நடத்தி நான் நாட்டில் இனவாதத்தினை தலைதூக்கச் செய்வதற்காக பொய்யான கருத்துக்களை வெளியிடுவதாகவும் பிரஸ்தாபித்தார்கள்.

இதன் பின்னர் தான் நாட்டின் தலைமைகள் மற்றும் அரசாங்கம் இந்த விடயத்தினை கவனத்தில் கொள்ளாத நிலையில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் ஐ.எஸ்.க்கு சென்று பயிற்சி பெற்று நாட்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு தயாராகி வருகின்றார்கள் என்று கடந்த 2016 நவம்பர் மாதம் 18 ஆம் திகதி முழு நாட்டுக்கும் பகிரங்கப்படுத்தினேன். அத்துடன் இவர்கள் வறுமையானவர்கள் அல்லர்.பொருளாதாரம், கல்வியில் உயர் மட்டத்தில் உள்ளார்கள் என்றும் கூறினேன். இதன்போது பலர் என்னை சபித்தார்கள். இனவாதி என்று சேறுபூசி தூற்றினார்கள். இந்த அவமான நிலைமைகள் அனைத்துக்கும் முகங்கொடுத்ததை அடுத்தே அமைச்சரவையிலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன்.

கேள்வி:- நீங்கள் இத்தகைய குற்றச்சாட்டினை அமைச்சரவையில் முன்வைத்தபோது முஸ்லிம் அமைச்சர்களின் பிரதிபலிப்புக்கள் எவ்வாறு இருந்தன?

பதில்:- அவர்கள் நேரடியாக பிரதிபலிப்புக்களைச் செய்திருக்கவில்லை. இருப்பினும் முற்போக்கு சிந்தனைகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளான ஹபீர் ஹாசீம், ரவூப் ஹக்கீம், ஹலீம் போன்றவர்கள் இந்த விடயம் பற்றி பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடவில்லை. உலகில் எங்குள்ள தீவிரவாத அமைப்புக்களும் தமக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்பவர்களைய முதலில் அழிப்பது தான் இயல்பு. அந்த அடிப்படையில் இந்த விடயம் சம்பந்தமாக கருத்துக்களை வெளியிட்டால் தமக்கு இளம் தீவிரவாத கும்பலால் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அவர்கள் கருதியிருக்கலாம். எமது நாட்டில் கூட அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்களின் மரணம் முன்னுதாரணமாக இருக்கின்றதல்லவா?

கேள்வி:- நீங்கள் நாட்டுக்குப் பகிரங்கப்படுத்திய தகவல்கள் புலனாய்வுத்தரப்புக்கு எக்காலத்தில் கிடைத்திருந்தன. அது தொடர்பில் ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?

பதில்:- நான் புலனாய்வு கட்டமைப்பின் பிரதானியும் அல்ல. சுட்டம் ஒழுங்கு அமைச்சரும் அல்ல. இருப்பினும் நான் அறிந்த வரையில் ஜனாதிபதி மற்றும் எனது எதிர்ப்புக்கு மத்தியில் புலனாய்வுக் கட்டமைப்பு பிரதமர் தலைமையிலான தரப்பால் மலினப்படுத்தப்பட்டது. கடந்த நான்கரை வருடங்களில் இராணுவப்புலனாய்வு பிரிவில் உள்ள 172பேரிடத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடற்படை தரப்பில் 152பேரிடத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் 42 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அதில் அறுவர் இன்னமும் விளக்கமறியலிலேயே உள்ளனர். பொலிஸ் மற்றும் விமான படை தொடர்பில் என்னிடத்தில் தகவல்கள் இல்லை. இவ்வாறான செயற்பாடுகள் புலனாய்வு கட்டமைப்பினை மௌனிக்கவே செய்திருந்தது. அதுமட்டுமன்றி நாட்டில் செயல் திறன் மிக்க அரசாங்கமே இல்லாத நிலையில் எப்படி நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

கேள்வி:- உங்களுடைய தகவல்களை அரசாங்கத்தின் எந்தவொரு பிரதிநிதியும் உள்வாங்காமைக்கான காரணம் என்ன?

பதில்:- அரசாங்கத்தினை தக்கவைப்பது தான் காரணம். முஸ்லிம் பிரதிதிநிகள் அனைவரும் அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்தார்கள். ஆகவே இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னபாதாக அது பற்றி கருத்துக்களை பரிமாறவே தயங்கினார்கள். 1988ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஆதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக அரசியலமைப்பில் 15ஆவது திருத்தத்தினை மேற்கொண்டார்கள்.

12.5 சதவீததத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு தகுதியற்றதாக்கப்படும் என்பதை 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெறுபவர்கள் தகுதியற்றதாக்கப்படுவார்கள் என்று மாற்றப்பட்டது. முஸ்லிம்வாக்குகள் அனைத்தையும் பெற்றுத்தருகின்றேன்;. இந்த மாற்றத்தினை மேற்கொள்ளுங்கள் என முஸ்லிம் காங்கிரஸினை ஸ்தாபித்திருந்த அஷ்ரப்பின் கோரிக்கை ஏற்று தான் பிரமதாஸ அவ்வாறு செய்திருந்தார்.

அதன் பிரதிபலிப்பு தற்போதும் உள்ளது. முஸ்லிம் பிரதிதிநிதித்துவங்களின் பங்களிப்பின்றி 113ஆசனங்களை ஒரு கட்சியால்பெறமுடியாத நிலைமை இருக்கின்றது. தற்போது கூட அது தான் நிலைமை. குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான முஸ்லிம் பிரதிநிதிகளை விசாரணைக்கு உட்படுத்துவதென்ன அதுபற்றி பேசவே அரசாங்கம் அச்சம் கொண்டிருக்கின்றது. காரணம், அவர்களுடன் முரண்பட்டால் ஆட்சியை தக்க வைக்க முடியாத நிலைமையே உள்ளதென்பதாலாகும்.

கேள்வி:- நீங்கள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களையும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளீர்களே, அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளுக்கு அவர்கள் எவ்வாறு பொறுப்புக்கூற முடியும்?

பதில்:- நான் 2016 இல் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களை பற்றிய விடங்களை பாராளுமன்றில் வெளிப்படுத்தியபோது, ஹிஸ்புல்லா, முஜிபுர் ரஹ்மான், அசாத்சாலி போன்றவர்கள் நான் இனவாதத்தினை தூண்டுவதாக கூறினார்கள். தௌஹீத் அமைப்பினருக்கு நற்சான்றிதழ் வழங்கினார்கள். நாட்டை லிபியாவாக மாற்றப்போவதாகவும், முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்து மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கு வழிசமைப்பதாகும் சாடினார்கள். இவர்களின் இந்தக்கருத்துக்கள் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை வலுப்படுத்தியுள்ளன.

தற்போது இடம்பெற்ற ஊயிர்ப்பலிகள், இழப்புக்கள், அமைதியற்ற நிலைமைகளுக்கு அன்று மறுதலித்து பேசிய இவர்கள் பொறுப்பு ஏற்பார்களா? அதுமட்டுமன்றி அமைச்சர் ரிஷாட் பதியூர்தீனின் சகோதரருக்கு இப்ரஹிம் ஹாஜியார் போன்றவர்களுடன் வர்த்தக தொடர்புகள் இருந்துள்ளதாக கூறப்படுகின்றனது. பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆகவே இவர்களிடத்தில் உடனடியாக விசாரணை செய்யப்பட வேண்டும். இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படாதிருப்பதையிட்டு முஸ்லிம் சமுகத்தினரே வியப்பில் உள்ளார்கள். மறுபக்கத்தில், முற்போக்கான தலைவர்களாக இருக்கின்ற ஹக்கீம், ஹபீர் ஹாசீம், ஹலீம் போன்வர்கள் செயற்பட முடியாத இக்கட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

காரணம், அவர்களுக்கு கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கு பவிகள் வழங்கப்பட்டு முன்கொண்டுவரப்பட்டுள்ளதாலும், கட்சியை பிளவடையாது பாதுகாக்க வேண்டும் என்பதாலும் சூழ்நிலைக் கைதிகளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது கூட முன்னெடுக்கப்படும் விசாரணைகள் எவ்வளவு தூரம் செல்லும் என்று என்னால் கூறமுடியாது. அதுமட்டுமன்றி நாட்டின் சில பிரதேசங்கள் சோதனை  இடுவதற்குகூட முடியாத அளவி;ற்கு பாதுகாப்புத்துறை மீது அரசியல் தலையீடு காணப்படுகின்றது.

கேள்வி:- இந்த நபர்களைவிடவும், தாக்குதல் குறித்து இந்திய புலனாய்வுத்துறையிடமிருந்து தகவல்கள் முன்கூட்டியே கிடைக்கப்பெற்றுதாகவும், குறித்த தினமன்று கூட இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றதே. அவ்வாறாயின் அந்த விடயத்திற்கு பொறுப்பேற்க வேண்டியது யார்?

பதில்:- ஜனாதிபதி தனக்கு அறிவிக்கவில்லை என்று கூறுகின்றார். பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் நான்கு மாதங்களாக பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. எவ்வாறாயினும், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரே இந்த விடயத்தில் பொறுப்பாளிகள். இவர்கள் இருவரும் குறித்த பதவிகளுக்கு சற்றேனும் பொருத்தமில்லாதவர்கள்.

அவர்களின் கவலையீனமே அனைத்துக்கும் காரணமாகவுள்ளது. இலங்கை அல்லாத வேறு நாடாகவிருந்தால் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறலில்லை. நான் தனி நபராக அவர்களிடத்தில் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கதல் நடத்தப்பட்ட 6பிரதேச பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்துள்ளேன். மேலும் புலனாய்வு தகவல் ஒன்று கிடைத்தால் அதனை பொறுப்பான அமைச்சர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது ஒருபுறமிருந்தாலும் நிருவாக ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்த இருநபர்களிடத்திலும் தான் உள்ளது.

கேள்வி:- பிரதமர், பொலிஸ் மா அதிபர் பாதுகாப்புச்சபைக்கு நான்கு மாதங்களாக அழைக்கப்படாத நிலையில் அவர்கள் எவ்வாறு பொறுப்பாளிகளாக முடியும்?

பதில்:- பாதுகாப்புச் சபையில் போதைப்பொருள் ஜனாதிபதி கொலைச்சதி , ஒழிப்பு மற்றும் பாதாள உலகத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றபோது அந்தத் தகவல்கள் நேரடியாக போதைவர்த்தகர்கள், பாதாள தலைவர்களிடத்தில் சென்றுவிடுகின்றது என்பதாலேயே அவர்களுக்கான அழைப்பு மறுக்கப்பட்டதாக எனக்கு ஜனாதிபதி தரப்பில் கூறப்பட்டது.

கேள்வி:- பொலிஸ் மா அதிபர் பதவி விலகாத நிலைமை நீடிக்கின்ற நிலையில் அவரை நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றதல்லவா?

பதில்:- ஆம், 2002ஆம் ஆண்டு 5ஆம் இலக்க திருத்தச்சட்டத்தின் காணப்படுகின்றதன் பிரகாரம், நான்கு காரணங்களின் கீழ் பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி நீக்குவதற்கு அதிகாரம் உள்ளது.

கேள்வி:- தீவிரவாதத்தினை கட்டுப்படுத்துவதற்கு போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லை ஆகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை உடன் அமுலாக்க வேண்டும் என்ற பிரதர் ரணில் கூற்றை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- சிறுபிள்ளைத்தனமானது, மருமகனின் மூளை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் மாமனாரின் மூளையை உலககே அறியும் அல்லவா? 1979ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அவரே கொண்டுவந்திருந்தார். இதன்மூலம் உலகத்தில் முதன்நிலை தரப்பான விடுதலைப்புலிகளை கட்டுப்படுத்த முடிந்திருக்கின்றது அல்லவா. இதனை விட ஒரு புதிய சட்டம் தேவை தானா. இதனை விடவும் குற்றவியல் தண்டனைக் கோவைச்சட்டத்திலும் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. ஆகவே சட்ட ஏற்பாடு இல்லை என்று கூறுவது விநோதமான கருத்தாக உள்ளது.

உண்மையிலேயே அவர்களுக்கு யாரையோ திருப்தி செய்வதற்காக புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினை அவசரமாக அமுலாக்க வேண்டியுள்ளது. ஆனால் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் வேடிக்கை என்னவென்றால் இந்த சட்டத்தினை வெளிவிவகார அமைச்சரே அமைச்சரவைக்கும், பாராளுமன்றுக்கும் கொண்டு வருகின்றார். நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி, படைகளின் தலைவர் ஜனாதிபதி இதனை வேறு யாரும் வகிக்க முடியாது என்பது அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க வெளிவிவாகர அமைச்சருக்கு இந்தச் சட்டமூலத்தினை கொண்டு வருவதற்கு என்ன உரிமை இருக்கின்றது. நான் பதவியில் இருந்த காலத்திலும் இந்த சட்டத்தினை அமுலாக்க வேண்டும் என்று பெரும்பாடு பட்டார்கள்.

எனது மேசைக்கு நான்கு ஐந்து தடவைகள் இந்த சட்டமூலம் வந்தபோது நான் திருப்பி அனுப்பினேன். ஐ.நா.வின் விசேட பிரதிநிதி பென் எமர்சன் இந்த சட்டத்தினை எப்போது அமுலாக்கப்போகின்றீர்கள் என்று கோரியபோது நான் அவருடன் முரண்பட்டிருந்தேன். அதனை அமுலாக்கத்தான் தற்போது துடிக்கின்றார்கள்.

கேள்வி:- இந்தியா உட்பட சர்வதேச தரப்புக்களுடன் தீவிரவாத ஒழிப்பு செயற்பாடுகளுக்காக இலங்கை இணைந்து செயற்படுவதை எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்:- எமது நாடு சர்வதேச நாடுகளுடன் இணைந்துசெயற்பட்டிருக்கின்றது. சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெறுவதற்கு திறமையான ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் என்ற பெயரில் வெருளிகள் அரியாசனத்தில் இருப்பதால் எவ்விதமான பயனுமில்லை. சீனாவிற்கு அம்பாந்தோட்டை வழங்கியதிலிருந்து நாடு நெருக்கடியில் இருக்கின்றது. ஆகக்குறைந்தது இந்தியாவின் உதவியை பெற்றாலே அனைத்துப்பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண முடியும். தெற்காசியப் பிராந்தியத்தில் இலங்கை சிறியதாக இருந்தாலும், இந்தியாவுடன் இணைந்தால் நிரந்த அமைதியை நிலைநாட்டுவதற்கான சக்தி உள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்திக்கு தெற்காசிய வலயத்தினை வலுவாக்குவதற்கான பாரிய சிந்தனையும் இலக்கும் இருந்தது. அதற்கான அரசியல் வல்லமையும் அவருக்கே இருந்தது. இருப்பினும் எமது நாட்டினுள் இனவாதத்தினை தலைதூக்கச் செய்து அவர் படுகொலை செய்யப்பட்டமையும் எமது துரதிஸ்டவசமாகும்.

கேள்வி:- பூகோள போட்டிக்கான கேந்திரமாக இலங்கைமாறியிருப்பதன் காரணமாகவே தீவிரவாதிகளினால் இலக்கு வைக்கப்பட்டிருக்காலம் என்று விமர்சனத்தினை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- அதற்கான சான்றுகளை ஆராய்ந்து கண்டறிய வேண்டும். ஆனால் எனக்கு தெரிந்த வகையில் அம்பாந்தோட்டை துறைமுகம் ஐரோப்பிய, ஆபிரிக்க, மத்திய கிழக்கு கடற்போக்குவரத்திற்கான வாயிற்கதவாகும். நாளொன்க்கு 250இற்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கின்றன. அத்தகைய துறைமுகத்தினை உலக ஆட்சியை கைப்பற்ற முனையும் சீனாவிற்கு வழங்குவதை அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் விரும்பியிருக்கவில்லை.

சீன நிறுவனத்திற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் வழங்கப்பட்டதென்று கூறினாலும் அந்த நிறுவனம் சீன அரசினுடையது. அப்படியிருக்க, துறைமுகத்தினை வழங்குவத்கான தீர்மானம் எடுக்கப்பட்டபோது அமெரிக்காவின் விசேட பிரதிநிதி, ஐரொப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், இந்திய வெளியுறவுச் செயலர், யப்பான் வெளிவிவகார அமைச்சர்; என அனைவரும் இலங்கைக்கு வருகை தந்து சீனாவுக்கு அம்பாந்தோட்டையை வழங்க வேண்டாம் என்று பிரதமரிடத்தில் நேரடியாகவே கூறினார்கள்.

ஆனால் பிரதமரும், அமைச்சர் மலிக்கும் தரகுப்பணத்திற்காக அனைத்தையும் பொருட்படுத்தாமல் வழங்கினார்கள். அதன் பின்னர் இந்தியா திருகோணமலையையும், மத்தள விமான நிலையத்தினையும் வழங்குமாறு அழுத்தமளித்தது. அமெரிக்கா பொருளாதார கட்டமைப்பொன்றை நிறுவ இடமளிக்குமாறு கோரியது. இவ்வாறு சீனாவுக்கு துறைமுகத்தினை வழங்கியமை உலக நாடுகளின் பூகோள போட்டித்தளமாக எமது நாடு மாறுவதற்கு வழிவகுத்ததோடு பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

(நேர்கணால்:- ஆர்.ராம்)