(செய்திப்பிரிவு)

இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பிறகு இலங்கையுடனான இராணுவ உறவுகளை ஒபாமா நிர்வாகம் துண்டித்துக் கொண்டது ஒரு தவறாகும் என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும், ஒபாமா நிர்வாகத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க அமைச்சருமான ரொபேட் பிளேக் தெரிவித்திருக்கிறார்.

கடந்த செவ்வாய்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தலைமையிலான 'பார்த் பைன்டர்" பவுண்டேஷன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய பிளேக், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தினால் பெருமளவில் மனித உரிமை மீறல்கள் இழைக்கப்பட்டன என்ற முறைப்பாட்டை அடுத்தே இலங்கையுடனான உறவுகளை அமெரிக்கா துண்டித்துக்கொண்டது என்று குறிப்பிட்டார்.

'போரின் இறுதிக்கட்டங்களில், குறிப்பாக 2008 – 2009 பகுதியில் மனித உரிமைகள் பற்றிய அக்கறைகள் இலங்கை இராணுவத்துடனும், கடற்படையுடனுமான எமது இராணுவ ஒத்திகைகளை, பயிற்சிகளை, உதவிகளைப் பெரும்பாலும் முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்தியது. விடுதலைப் புலிகள் கப்பல் மூலமாக ஆயுதங்களைக் கொண்டு வருவதை முறியடிப்பதற்கு இலங்கைக்கு உதவுவது அமெரிக்காவின் நலன்களுக்குச் சாதகமானது என்று வாதிட்டு இலங்கைக் கடற்படைக்கும், எமது கடற்படைக்கும் இடையிலான ஒத்துழைப்பை கடுமையான முயற்சிகளின் விளைவாக ஒரு சிறிய அளவிலேனும் தொடர்ந்து பேணுவதற்கு என்னால் இயலுமாக இருந்தது. இன்று அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது" என்று பிளேக் தனது உரையின் போது கூறினார்.

பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு இராணுவப் பயிற்சி அளிப்பதை அமெரிக்கா நிறுத்தியது தொடர்பில் குறிப்பிட்ட முன்னாள் அமெரிக்க தூதுவர், அவ்வாறு பயிற்சியை நிறுத்தியதன் மூலமாக பாக்கிஸ்தானின் இராணுவ அதிகாரிகளில் ஒரு முழுத்தலைமுறையுடனான தொடர்புகளை அமெரிக்கா இழந்துவிட்டது. அதனால் அந்தத் தலைமுறையினர் அமெரிக்க விரோத உணர்வுகளுடனேயே வளர்ந்திருக்கிறார்கள். பாக்கிஸ்தான் இராணுவத்திற்கும், அமெரிக்க இராணுவத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கு முக்கியமாகத் தேவைப்படுகின்ற கூட்டுச்செயற்பாடு இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

 மீண்டும் ஏற்படுத்தப்பட்ட இலங்கை – அமெரிக்க ஒத்துழைப்பு

கடல்சார் பாதுகாப்பு தொடக்கம் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் வரை பல்வேறு துஐறகளில் இலங்கை இராணுவமும், அமெரிக்க இராணுவமும் இப்போது ஒன்றுசேர்ந்து பயிற்சி செய்து கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்ட ரொபேட் பிளேக், கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்க இலங்கைக்கு அமெரிக்கா 3 கோடி 9 இலட்சம் புதிய பாதுகாப்பு உதவித்திட்டத் ஒன்றை அமெரிக்கா அறிவித்திருக்கிறது. 

2018 ஆம் ஆண்டில் இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்கா அதன் கரையோரக் காவல் கப்பலொன்றையும் வழங்கியது. இப்பொழுது நாம் முப்படைகளுடனும் கூட்டுப்பயிற்சி ஒத்திகைகளையும் கிரமமாக நடத்துகின்றோம். இவை அனைத்தும் வளர்ந்து வருகின்ற ஆரோக்கியமான இராணுவக் கூட்டுப்பங்காண்மை ஒன்றின் அறிகுறிகளாகும். அதேபோன்Nறு சட்டத்தை அமுலாக்கும் செயற்பாடுகளிலும் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. 

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான அதன் விசாரணைகளுக்கு உதவுமாறு இலங்கையிடமிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு விரைவாகவும், பயனுறுதியுடைய முறையிலும் அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பணியகம் உதவ முன்வந்தது. இதைவிட பலமடைந்திருக்கும் இந்த ஒத்துழைப்பிற்கு வேறு சான்று எதுவும் தேவையில்லை என்று விளக்கமளித்தார்.