12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரமபமானது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத்  அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளேஒப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முறையே 5 முதல் 8 ஆவது இடங்களை பிடித்து வெளியேறின.

‘பிளேஒப்’ சுற்று ஆட்டம் கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமானது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

அத்தடன் கடந்த 8 ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி, 2 ஆவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. 

நேற்றுமுன்தினம் இரவு விசாகப்பட்டினத்தில் நடந்த 2 ஆவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை தோற்கடித்து மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

இந் நிலையில் ஐ.பி.எல். கிண்ணத்தை மீண்டும் வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்–ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011, 2018 ஆம் ஆண்டுகளிலும்), மும்பை இந்தியன்ஸ் (2013, 2015, 2017 ஆம் ஆண்டுகளிலும்) அணிகள் தலா 3 முறை கிண்ணத்தை சுவீகரித்திருக்கின்றன,

இந் நிலையில் 4 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதிக்க போகும் அணி எது? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள். 

இரண்டு ஆண்டு தடையை சந்தித்த சென்னை அணி 10 ஆவது முறையாக இந்த போட்டியில் களம் கண்டு அதில் 8 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது. மறுமுணையில் மும்பை அணி 5 ஆவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

இதேவேளை ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் சென்னை, மும்பை அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி 16 முறையும், சென்னை அணி 11 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

அத்துடன் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 3 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 2010 ஆம் ஆண்டில் சென்னை அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி கோப்பையை வென்றது. 2013 ஆம் ஆண்டில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2015 ஆம் ஆண்டில் 41 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் மும்பை அணி சென்னையை வீழ்த்தி பட்டத்தை தனதாக்கியது. 

இன்று 4 ஆவது முறையாக இறுதிப்போட்டியில் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.