மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பகுதிக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லவிருந்தவர்கள் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை சவுக்கடி பகுதியில் இனந்தெரியாதவர்களின் நடமாட்டத்தினை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கலாவத்தை பகுதியை சேர்ந்த இரண்டு பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர்களும் வந்தாறுமூலையை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மூவரும் பயணப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களை ஏற்றிவந்ததாக கருதப்படும் முச்சக்கர வண்டியொன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இப்பகுதியில் இருந்து 15க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு சட்ட விரோதமான முறையில் அவுஸ்ரேலியா செல்வதற்கு முற்பட்டுள்ளதாகவும் தப்பிச்சென்றுள்ள ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.