பாகிஸ்தானிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின், பலோசிஸ்தான் மாகாணத்தின் குவாதர் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் 4 பேர் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

தீவிரவாதிகள் சரமாரியாக மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அங்கிருந்தவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் ஹோட்டலில் நுழைந்துள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இராணுவம் மற்றும் கடற்படை கமாண்டோக்கள் ஹோட்டலினுள் நுழைய முயற்சித்து வருகின்றனர். 

அத்துடன் தீவிரவாதிகளுக்கும் இராணுவ கொமாண்டோ படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்று வருகின்றது.

நட்சத்திர விடுதியில் வெளிநாட்டவர் எவரும் இல்லை என பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தானின் குவாதர் நகரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழப்பு குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இதேவேளை, குவாதர் நகரில் ஒரு வாரத்திற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.