இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்­தினால் தேசிய பாதுகாப்­புக்கு ஏற்­பட்­டுள்ள புதிய நெருக்­க­டி­யையும் அச்சுறுத்தலையும் முறி­ய­டிப்­ப­தற்­காக அல்லும் பக­லு­மாக ஆயு­தப்­ப­டை­யி­னரும் பொலிஸ் மற்றும் அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் சோதனை நட­வ­டிக்­கை­க­ளையும், தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ளார்கள். இந்தத் தேடு­தல்கள் மற்றும் சோதனை நட­வ­டிக்­கை­களின் மூலம் நாட­ளா­விய ரீதியில் நில­விய அச்­ச­நி­லைமை தணிந்து வரு­கின்­றது.

பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்­பது இலங்­கைக்குப் புதி­ய­தல்ல. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை வென்றெடுப்ப­தற்­காக தமிழ் மக்கள் மேற்­கொண்ட சாத்­வீக வழியிலான அர­சியல் போராட்­டங்­களை நசுக்கி அடக்கி ஒடுக்­கி­ய­தனால் உரு­வா­கிய தமிழ் இளை­ஞர்­களின் அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்­டத்தை பயங்­க­ர­வா­த­மாகச் சித்­த­ரித்து, அதனை முடி­வுக்குக் கொண்டு வந்த அனு­பவம் ஏற்­க­னவே அர­சாங்­கத்திற்கு இருக்­கின்­றது.  

அன்­றைய பாரா­ளு­மன்­றத்­திற்கு முன்னால், சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த தமிழ் அர­சியல் தலை­வர்கள் மீது ஆயு­த­மேந்­திய பொலி­ஸாரைப் பயன்­ப­டுத்தி, குண்­டாந்­தடிப் பிர­யோகம் செய்து இரத்தம் சொட்­டச்­சொட்ட போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களைக் குண்டுக் கட்­டாகத் தூக்கிச் சென்­றதன் மூலம், அரசு  அவர்­களை அந்த இடத்தில் இருந்து அப்­பு­றப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அந்தப் போராட்டம் அந்த வகை­யி­லேயே அன்று அர­சாங்­கத்­தினால் முறி­ய­டிக்­கப்­பட்­டது. 

வடக்கு, கிழக்கு எங்கும் பர­வி­யி­ருந்த தமிழ் மக்­களின் சாத்­வீகப் போராட்டத்தை பல்­வேறு வழி­களின் மூலம் ஆயுத முனையில் அடக்­கி­யொ­டுக்க முற்­பட்­டதன் விளை­வா­கவே தமிழ் இளை­ஞர்கள் தமது உயிர்­க­ளையும் துச்­ச­மாகக் கருதி ஆயு­த­மேந்திப் போராட நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டார்கள். உரி­மை­க­ளுக்­கான போராட்டம் என்­பது ஒரு புற­மி­ருக்க, ஆயுதப் படை­களின் தாக்­கு­தல்­களில் இருந்து தமிழ் மக்­களைக் காப்­ப­தற்­கா­கவும் தமிழ் இளை­ஞர்கள் ஆயு­த­மேந்த நேரிட்­டி­ருந்­தது. 

நாடு அன்­னி­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­திரம் பெற்ற நாள் முத­லாகத் தொடர்ச்­சி­யாக மறுக்­கப்­பட்டு வந்த அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களும் அரச தலை­வர்­க­ளுடன் தமிழ்த் தலை­வர்கள் செய்து கொண்ட இணக்க நட­வ­டிக்­கை­க­ளுக்­கான ஒப்­பந்­தங்­களும் கிழித்­தெ­றி­யப்­பட்டு, போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் மீது அரச வன்­முறை பயன்­ப­டுத்­தப்­பட்­டது. 

இந்த வன்­முறை நட­வ­டிக்­கை­களின் தொடர்ச்­சி­யா­கவே 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாழ்ப்­பாணம் திரு­நெல்­வே­லியில் ஆயு­த­மேந்திச் சென்ற படை­யி­னரைக் குறி­வைத்து விடு­த­லைப்­பு­லி­களைத் தாக்­கிய போரியல் சம்­ப­வத்­திற்கு எதிர்­வி­னை­யாக, அப்­பாவி சிவி­லி­யன்­க­ளான தமிழ் மக்கள் மீதான இன வன்­முறைத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. 

முதலில் கொழும்­பிலும் பின்னர் அதன் சுற்­றுப்­பு­றங்­க­ளிலும் தொடர்ந்து நாடெங்கும் உள்ள மாவட்டத் தலை­ந­க­ரங்கள் உள்­ளிட்ட பல இடங்­க­ளிலும் காடை­யர்­க­ளாகத் தூண்­டி­வி­டப்­பட்ட சிங்­க­ள­வர்கள் தமிழ் மக்­களின் வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள், உடை­மைகள் என்­ப­வற்றைக் கொள்­ளை­ய­டித்தும் தீயிட்டும், கண்ணில் அகப்­பட்­ட­வர்­களைக் கொன்றும் தீயிட்டுக் கொளுத்­தியும் வெறி­யாட்டம் நடத்­தி­னார்கள். 

அன்­றைய யாழ்ப்­பாணம் திரு­நெல்­வேலி தபால் பெட்டிச் சந்­தியில் ஆயு­த­மேந்திப் பதுங்­கி­யி­ருந்த விடு­த­லைப்­பு­லிகள் ஆயு­த­மேந்­தி­ய­வர்­க­ளாக போர்க்­கோலம் பூண்­டி­ருந்த இரா­ணு­வத்­தினர் மீது கண்­ணி­வெடித் தாக்­குதல் நடத்­தி­ய­துடன் நேரடி துப்­பாக்கிச் சம­ரிலும் ஈடு­பட்­டி­ருந்­தனர். இந்தச் சம்­ப­வத்தில் 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர். 

ஆயு­த­மேந்­திய இரு தரப்­பி­ன­ருக்கு இடை­யி­லான ஒரு சண்­டை­யாக – ஓர் ஆயுத மோத­லாக அதனைக் கணித்து, அதற்­கேற்ற வகையில் பண்­பட்ட முறையில் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அன்­றைய இரா­ணுவத் தலை­மையும் அரச தலை­வ­ராக இருந்த ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­­வர்­த­னவும் அர­சாங்­கமும் அர­சியல் ரீதி­யாக முதிர்ச்சி பெற்­றி­ருக்­க­வில்லை. 

தேசப்­பற்­று­டைய ஓர் அர­சியல் தலை­வ­ராக அல்­லாமல் ஓர் இன­வாதத் தலை­வ­னுக்கே உரிய தன்­மை­யுடன் அப்­பாவிப் பொது­மக்­க­ளான தமி­ழர்­களைக் கொன்­றொ­ழிப்­ப­தற்­கான இன­ வன்­மு­றையைக் கட்­ட­விழ்த்­து­விட்டு,  இன ஒழிப்பு நட­வ­டிக்­கை­யா­கவே அவர்­க­ளு­டைய வணிக சொத்­துக்­களை அழித்து நாசம் செய்­வ­தற்­கான வழி­யேற்­ப­டுத்­தி­யி­ருந்தார். அது மட்­டு­மல்­லாமல் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களை நோக்கி, போர் என்றால் போர் சமா­தானம் என்றால் சமா­தானம் என்று முர­ச­றி­விப்­பையும் செய்தார். 

அன்­றைய அந்தப் போர்ப்­பி­ர­க­ட­னமும், தமிழ் மக்கள் மீது கட்­ட­விழ்த்­து ­வி­டப்­பட்ட ஒரு வார காலத்­துக்கும் மேற்­பட்ட இன ஒழிப்­பிற்­கான அரச வன்­மு­றையும் சொந்த நாட்­டி­லேயே தமிழ் மக்­களின் பொதுப் பாது­காப்பைக் கேள்­விக்கும் சவா­லுக்கும் உள்­ளாக்­கி­யி­ருந்­தது. இந்த நிலை­யில்தான் தமிழ் இளை­ஞர்கள் அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்கும் தமிழ் மக்­களை அரச பயங்­க­ர­வா­தத்தில் இருந்து பாது­காப்­ப­தற்­கு­மாக ஆயு­மே­தந்திப் போரா­டு­வ­தற்­காகக் கள­மி­றங்­கி­னார்கள்.  

பயங்­க­ர­வாதம் பற்­றிய கருத்து நிலை கொள்கை நிலைப்­பாடு, கருத்­தியல் என்­பது வேறு,பயங்­க­ர­வாதம் என்­பது வேறு. ஒரு கொள்­கையை அல்­லது கருத்­தி­யலை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்ற செயற்­பா­டுகளில் பயங்­க­ர­வாதச் செயற்­பாடும் ஒன்­றாகும். அது வன்­முறை சார்ந்­தது. வன்­மு­றை­களின் ஊடாகக் கருத்­தியல் சார்ந்த ஓர் இலக்கை எட்­டு­வ­தற்­காகப் பயன்­ப­டுத்­து­கின்ற கரு­வியே அது. 

விடு­த­லைப்­பு­லிகள் தமிழ் மக்­களின் உரி­மை­களைச் சிங்­கள அர­சியல் தலை­வர்­க­ளிடம் இருந்து வென்­றெ­டுக்க முடி­யாது என்ற கட்­டத்தில்தான் தமி­ழர்­க­ளுக்­கான தனி­நாடு என்ற இலக்கை தமது கொள்­கை­யாக வரித்துக் கொண்­டார்கள். அந்தத் தனி­நாட்டை உரு­வாக்­கு­வ­தற்­காக அவர்கள் வன்­முறை வழி­யி­லான ஆயுதப் போராட்­டத்தைக் கைக்­கொண்­டி­ருந்­தார்கள். 

எனவே, தமி­ழர்­க­ளுக்­கான தனி­நாடு என்­பது பயங்­க­ர­வாதம் அல்ல. அதனை அடை­வ­தற்­காகக் கைக்­கொள்­ளப்­பட்ட ஆயுதப் போராட்­டமே பயங்­க­ர­வா­த­மாக அர­சாங்­கத்­தினால் நோக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அது நடை­பெ­ற­வில்லை. தமிழர்­களின் அர­சியல் உரி­மை­களை சாத்­வீக முறையில் அடைய முடி­யாத சூழலில், தனி­நாட்­டுக்­கான ஆயுதப் போ­ராட்­டத்தை பயங்­க­ர­வா­த­மா­கவும், ஆயு­த­மேந்­திய தமிழ் இளை­ஞர்­களை – குறிப்­பாக விடு­த­லைப்­பு­லி­களை பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும் அரச தரப்­பினர் நோக்­கி­னார்கள்.  

இன­வாத அடிப்­ப­டை­யி­லான இந்த அர­சியல் இரா­ணுவ நிலைப்­பாடே விடு­த­லைப்­பு­லி­க­ளையும் அவர்­க­ளுடன் சேர்த்து தமிழ் மக்­க­ளையும் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும் அவர்­களின் செயற்­பா­டு­களை பயங்­க­ர­வா­த­மா­கவும் அரச தரப்­பி­ன­ரையும், இன­வா­தத்தின் பிடியில் சிக்க வைக்­கப்­பட்­டி­ருந்த சிங்­கள மக்­க­ளையும் நோக்கச் செய்­தி­ருந்­தது. 

செயல்­வினைத் தன்மை கொண்ட பயங்­க­ர­வா­தத்­தையும், அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான கொள்கை வழி­யி­லான கருத்­தியல் நிலைப்­பாட்­டையும் பிரித்­த­றியும் பக்­குவம் இல்­லாத கார­ணத்­தி­னா­லேயே விடு­த­லைப்­பு­லிகள் இரா­ணுவ ரீதி­யாகச் செய­லி­ழக்­கப்­பட்டு, யுத்­தத்­திற்கு ஒரு முடிவு காணப்பட்டுள்ள போதிலும், இனங்­க­ளுக்­கி­டையில் ஓர் இணக்­கப்­பாட்­டையும் நல்­லு­ற­வையும் கடந்த பத்து வரு­டங்­க­ளாக அரச தரப்­பினால் உரு­வாக்க முடி­யா­துள்­ளது.

யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து நாட்டில் சமா­தானம் நில­வு­கின்­றது என்­பது உண்­மைதான். மறுக்க முடி­யாது. இந்த சமா­தானம் வெறுப்­பு­ணர்வு, கசப்­பு­ணர்வு என்­ப­வற்­றினால் துரு­வ­ம­யப்­பட்­டுள்ள இனங்­க­ளு­டைய உள்­ளங்கள் உவந்து ஏற்­றுக்­கொண்­ட சமா­தான நிலைப்­பா­டல்ல. மாறாக இந்த சமா­தானம் இரா­ணு­வத்­தி­னரால் உரு­வாக்­கப்­பட்ட சமா­தானம். இரா­ணு­வத்­தி­னரால் ஆயுத முனையில் தொடர்ச்­சி­யாகக் கண்­கா­ணித்து கவ­னிக்­கப்­ப­டு­கின்ற சமா­தானம். உள்­ளங்கள் ஒன்­றி­ணை­வதன் மூலம் ஏற்­ப­டு­கின்ற சமா­தா­னமே உண்­மை­யான சமா­தா­ன­மாகும். நிலைத்து நிற்கக் கூடிய சமா­தா­ன­மு­மாகும். யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்கள் உருண்­டோ­டி­விட்ட போதிலும் அந்த சமா­தா­னமும் இன ஐக்­கி­யமும் இன்னும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை என்­பதே இன்­றைய அர­சியல் யதார்த்தம். 

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே இலங்­கையில் புதி­தா­கவும் மிகப் பயங்­க­ர­மான முறை­யிலும் தலை­தூக்­கி­யுள்ள இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்­தையும், அதனை முறி­ய­டித்து, தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அவ­ச­ர­காலச் சட்­டத்தின் துணை­யோடு அர­சாங்கம் முடுக்­கி­விட்­டுள்ள சுற்றி வளைப்புத் தேடுதல் மற்றும் வீதிச் சோத­னை உள்­ளிட்ட சோதனை நட­வ­டிக்­கை­க­ளையும் நோக்க வேண்­டி­யுள்­ளது. 

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்தின் இலக்கு தெளி­வா­னது. இஸ்­லா­மிய பேர­ரசு ஒன்றை உரு­வாக்க வேண்டும் என்ற மிக இறுக்­க­மான கொள்­கைக்­கா­கவே ஐ.எஸ். என்ற உலக பயங்­க­ர­வாத அமைப்­பினர் நாடுகள் பல­வற்­றிலும் எதிர்­பா­ராத வேளை­களில் எதிர்­பா­ராத இடங்­களில் பொது­மக்­களை இலக்கு வைத்து தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருக்­கின்­றார்கள். 

இந்தத் தாக்­கு­தல்கள் தொடர் தாக்­கு­தல்­க­ளாக ஒரே நேரத்தில் அல்­லது அடுத்­த­டுத்து பல இடங்­களில் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. இஸ்­லா­மி­யர்கள் மாத்­தி­ரமே இந்த உலகில், நாடு­களில் வாழ வேண்டும். ஏனை­ய­வர்கள் அனை­வரும் எதி­ரிகள். அவர்கள் கொன்­றொ­ழிக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள் என்­பது ஐ.எஸ். அமைப்­பி­னரின் கொள்கை. அதுவே அவர்­களின் நிலைப்­பாடு. அதனை அடை­வ­தற்­காக பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களைக் கையில் எடுத்­தி­ருக்­கின்­றார்கள். அந்தத் தாக்­கு­தல்கள் தற்­கொ­லைக்­குண்­டுத்­தாக்­கு­தல்கள் முறை­யி­லா­ன­தாகும். 

இஸ்­லா­மி­யர்கள் எல்­லோ­ருமே அடிப்­ப­டை­வா­தி­க­ளு­மல்ல. ஐ.எஸ். அமைப்­பி­ன­ரு­டைய அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத பயங்­க­ர­வா­தி­க­ளு­மல்ல. இதனை அரச தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். வெளிப்­ப­டை­யாக அதனை அவர் சுட்­டிக்­காட்­டி­யு­முள்ளார். ஏனைய சில அர­சி­யல்­வா­தி­க­ளும்­கூட இந்தக் கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். 

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான இரா­ணுவ நட­வ­டிக்கை மேற்­கொண்ட காலத்தில் விடு­த­லைப்­பு­லி­களைப் பயங்­க­ர­வா­தி­க­ளாக நோக்­கி­யதைப் போலவே, தமிழ் மக்­க­ளையும் பயங்­க­ர­வா­தி­க­ளாக நோக்­கிய நிலை­மை­யையும் அவர் இப்­போது நாடா­ளு­மன்­றத்தில் நினை­வு­கூர்ந்­துள்ளார். 

நடை­முறை என்ன?

இந்தக் கருத்து வெளிப்­பா­டா­னது, தேர்­தலில் முஸ்லிம் மக்­களின் வாக்கு வங்­கியை இலக்கு வைத்­ததா அல்­லது உண்­மை­யான நிலை­மையை ஏற்­றுள்ள உளப்­பூர்­வ­மான­தா என்­பது தெரி­ய­வில்லை. இருப்­பினும் இந்த கருத்து வெளிப்­பா­டா­னது, இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வாதம் வேறு. பயங்­க­ர­வா­த­மாக அர­சாங்­கத்­தினால் சித்­த­ரிக்­கப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­களின் பயங்­க­­ரவாதம் என்­பது வேறு என்ற விடயம் அர­சியல் களத்தில் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சியல் மட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற இந்தத் தெளிவு அடி­மட்­டத்தில் தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் குறிப்­பாக வடக்கில் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள பொலிஸார் மற்றும் இரா­ணு­வத்­தினர் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றதா என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. புலிப்­ப­யங்­க­ர­வாத மனோ நிலையில் இருந்து அவர்கள் இன்னும் விடு­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

குறிப்­பாக வட­மா­கா­ணத்தில் இடம்­பெ­று­கின்ற வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­களில் அதனை உணர முடி­கின்­றது. வவு­னி­யாவில் இருந்து யாழ்ப்­பாணம் செல்­கின்ற ஏ9 வீதி, வவு­னி­யாவில் இருந்து மன்­னா­ருக்குச் செல்­கின்ற நெடுஞ்­சாலை அதே­போன்று வவு­னி­யாவில் இருந்து திரு­கோ­ண­ம­லைக்குச் செல்லும் வீதி என்­ப­வற்றில் ஒப்­பீட்­ட­ளவில் தென்­ப­கு­திகளில் உள்ள பிர­தான வீதி­க­ளிலும் பார்க்க எண்­ணிக்­கையில் அதி­க­மான வீதித் தடைகள் அமைக்­கப்­பட்டு சோதனை நட­வ­டிக்­கைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன. 

இதே­போன்ற வீதித்­தடை சோதனை நட­வ­டிக்­கைகள் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக யுத்தம் நடத்­தப்­பட்ட காலத்தில் இடம்­பெற்­றி­ருந்­தன. அந்தக் காலப்­ப­கு­தியில் இந்த சோதனை நட­வ­டிக்­கைகள் தமி­ழர்­களை இலக்கு வைத்து கடு­மை­யான சோதனை நட­வ­டிக்­கை­களும் அடை­யாள அட்­டையில் உள்ள விப­ரங்கள் பற்­றிய விரி­வான இடக்கு முடக்­கான கேள்­வி­க­ளு­ட­னான விசா­ர­ணை­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. 

அந்தக் காலம் விடு­த­லைப்­பு­லிகள் இரா­ணுவ முகாம்­க­ளையும், இரா­ணுவ நிலை­க­ளையும் இலக்கு வைத்து தாக்­கு­தல்­களை நடத்­து­கின்ற யுத்த மோதல் நடை­முறையில் இருந்­தது. எந்த நேரத்­திலும் எவரும் இரா­ணுவ நிலைகள் மீது தாக்­கு­தல்­களை நடத்­தலாம் என்ற நிலைமை காணப்­பட்­டது. வீதிச் சோத­னையில் சோத­னைக்­குள்­ளாக்­கப்­ப­டு­கின்ற  பய­ணிகள் எவ­ரும்­கூட ஒரு விடு­த­லைப்­பு­லி­யாக வந்து தாக்­குதல் நடத்­தலாம் என்ற நடை­மு­றை­யி­லான அச்ச நிலைமை நில­வி­யது. அதனால் அந்த சோதனை நட­வ­டிக்­கை­களைத் தீவி­ர­மா­கவும் மோச­மா­ன­தா­கவும் நடத்த வேண்­டிய தேவை எழுந்­தி­ருந்­தது என்­று­கூட கூறலாம். 

ஆனால் இன்­றைய நிலைமை வேறு. பயங்­க­ர­வா­திகள் தனி­யாட்­க­ளாக குண்­டு­களைக் கட்­டிக்­கொண்டு தற்­கொலைத் தாக்­கு­தல்­களை நடத்தி பெரும் எண்­ணிக்­கை­யி­லான பொதுமக்­களைக் கொன்­றொ­ழிப்­ப­தையே இலக்­காகக் கொண்டு நட­மா­டு­கின்­றார்கள். அல்­லது பதுங்­கி­யி­ருக்­கின்­றார்கள். 

இந்த நிலையில் தமிழர் பிர­தே­சங்­களில் தமி­ழர்கள் என்­பதைத் தெரிந்து கொண்டும் கடு­மை­யான சோத­னை­கனை மேற்­கொள்­வதும் இறுக்­க­மான பகை­யு­ணர்­வுடன் கூடிய அணு­கு­மு­றையில் பய­ணி­க­ளுடன் நடந்து கொள்­வதும் சாதா­ர­ண­மாக நடை­பெ­று­கின்­றது. அதை­யும்­விட ஒவ்­வொரு சோத­னைச்­சா­வ­டி­யிலும் சோத­னைகள் இடம்­பெற்­றதன் பின்னர் நூறு அல்­லது இரு­நூறு மீற்றர் தூரத்தை நடந்து, கடந்து சென்று தாங்கள் பயணம் செய்த பேருந்­து­களில் ஏறிச் செல்­லு­மாறு நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­வது எத்­த­கைய பாது­காப்பு நட­வ­டிக்கை என்­பது தெரி­ய­வில்லை. 

கொளுத்தும் வெய்­யிலில் சிறு­வர்கள், பெண்கள், வயோ­தி­பர்கள் என்ற பேத­மின்றி அனை­வ­ரையும் இவ்­வாறு பஸ்களில் இருந்து இறங்கி நடந்து செல்லச் செய்­வது படை­யி­னரின் வக்­கி­ர­மான மன உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது என்று அடிக்­கடி இந்த வீதி­களில் கட­மையின் நிமித்­தமும், அத்­தி­யா­வ­சிய தேவை­களின் நிமித்­தமும் பிர­யாணம் செய்­கின்ற பய­ணிகள் பலரும் ஆதங்­கத்­துடன் கூறு­கின்­றார்கள். 

யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் கைது மறு­பு­றத்தில் யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் நடத்­தப்­பட்ட திடீர் தேடுதல் நட­வ­டிக்­கையின்போது மாண­வர்கள் இரு­வரும் மற்றும் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்ட நட­வ­டிக்­கை­யும்­கூட நிலை­மையை தலை­கீ­ழாகக் கையாள்­கின்ற இன­வாதச் சாயம் கொண்ட பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான அணு­கு­மு­றை­யா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது.

பல்­க­லைக்­க­ழ­கத்தில் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் இருக்­கின்­றார்­களா அந்த பயங்­க­ர­வா­தத்­துடன் சம்­பந்­தப்­பட்ட விட­யங்கள், பொருட்கள் இருக்­கின்­ற­னவா என்று அறி­வ­தற்­கா­கவே படை­யினர் சுற்றி வளைத்து தேடுதல் நட­த்­தி­னார்கள் என்று பொது­வாக நம்­பப்­ப­டு­கின்­றது. இது இன்­றைய உலக பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் சார்ந்த நிலையில் மக்கள் கொண்­டி­ருக்­கின்ற எதிர்­பார்ப்பு. 

ஆனால் யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­திற்குள் சென்ற படை­யினர் மாண­வர்­களின் பொறுப்பில் விடு­த­லைப்­பு­லி­களின் தலை­வ­ரு­டைய படங்­களும் அது தொடர்­பி­லான பொருட்­களும் இருந்­ததைக் கண்­டு­பி­டித்து, மொத்­த­மாக மூன்று பேரைக் கைது செய்­துள்­ளார்கள்.

ஒரு விவா­தத்­துக்­காக வேண்­டு­மானால், இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதத் தேடு­தலின் போது விடு­த­லைப்­புலிப் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டைய விட­யங்­களும் இருக்­கின்­ற­னவா என்று சோத­னை­யிட்­டி­ருக்­கலாம். அது ஏற்­றுக்­கொள்ளக் கூடி­யது என்று கூறலாம். ஆனால், விடு­த­லைப்­பு­லிகள் பற்­றிய படங்கள் இருந்தமைக்காக அவர்களைக் கைது செய்தது, புதிய அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் ஏற்புடையதா என்ற கேள்வி எழுகின்றது. 

அது மட்டுல்ல. அவ்வாறு கைது செய்யப்பட்டமைக்கான காரணத்திலும்பார்க்க தீவிரமானதும் ஆபத்தானதுமான காரியத்திற்காக – காரணத்திற்காக நடத்தப்படுகின்ற தேடுதலின் போது அவர்களைக் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்திருக்கலாம். ஆனால் அது நடைபெறவில்லை. 

மாறாக அவர்களை பயங்கரவாதத் தடைச்சட்டம், புதிய அவசரகாலச் சட்டம் மற்றும் ஐ.நா. பட்டயத்திற்கமைய அரசியல் மற்றும் மத உரிமைகளுக்கான சட்டம் உள்ளிட்ட நான்கு சட்டங்களின் கீழ் குற்றம்சாட்டி அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள். இது உலக பயங்கரவாதத்தைத் தடை செய்வதற்கும் முறியடிப்பதற்குமான நடவடிக்கையின்போது இடம்பெற வேண்டியதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது. 

விடுதலைப்புலிகளின் படத்தை வைத்திருந்ததை பயங்கரவாதத்தைத் தூண்டுகின்ற நடவடிக்கையாகக் கருதுவதை எவ்வாறு நியாயமானது என்று ஏற்றுக்கொள்வது என்பது தெரியவில்லை. அதேநேரம் அது பயங்கரவாதத்திற்கு உயிரூட்ட வல்லது என்றும் நியாயப்படுத்துவது சரியானதாகத் தெரியவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் கழிந்த நிலையில் உலகளாவிய புதிய பயங்கரவாதம் ஒன்றிற்கு முகம் கொடுத்துள்ள தருணத்தில் இத்தகைய நடவடிக்கைகள் யுத்தத்தின் பின்னரான சூழலில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்துகின்ற முயற்சிகளுக்குக் குந்தகமாகவே அமையும். 

அதிலும் குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடித்தளமாகக் கொண்ட உலக பயங்கரவாதத்தின் தாக்குதல்களுக்கு நாடு முகம் கொடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றது. அந்தப் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு இனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த இன்றியமையாத தருணத்தில் புலிப்பயங்கரவாத மோகத்தில் அல்லது அந்தப் பயங்கரவாத மனோநிலையில் தமிழர் பிரதேசங்களில்  பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள்வது நன்மை பயக்கும் என்று கூற முடியாது. 

பி.மாணிக்கவாசகம்