(எம்.மனோசித்ரா)

நெதர்லாந்து பிரஜைகள் முன்னரைப் போன்று இலங்கைக்கு வருகை தர வேண்டுமானால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்று இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழியுறுத்தியுள்ளார்.

 

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ஜோன் டோர்னீவார்ட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்கட்சி தலைவரது உத்தியயோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே அவர் இதனை வழியுறுத்தியுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சதனமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த மக்களுக்கும், நாட்டுக்கும் நெதர்லாந்து அரசு அனுதாபங்களை தெரிவிப்பதாக தூதுவர் எதிர்கட்சி தலைவரிடம் தெரிவித்தார். 

மேலும் நெதர்லாந்து பிரஜைகள் இலங்கைக்கு வருகை தரவேண்டுமானால் நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல , பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதே வேளை இன்று தினம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அஹ்மத் அலி இபராஹிம் அல்முல்லாவையும் எதிர்கட்சி தலைவர் சந்தித்து கலந்துரையாடினார்.