(பா.ருத்ரகுமார்)

நாட்டில் அதிகரித்துவரும் சிறுநீரக நோயினைக் கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் ஆறு சிறுநீரக சிகிச்சை நிலையங்களை அமைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

மேலும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த சிகிச்சை நிலையங்கள் மே மாதமளவில் மக்கள் பாவனைக்காக கையளிக்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாடளாவிய ரீதியில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை நிலையங்கள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் ஆறு பிரதான சிறுநீரக சிகிச்சை நிலையங்கள் மே மாதமளவில் திறக்கப்படவுள்ளன.

இதனடிப்படையில், வெலிஓயா, அரலங்கங்வில, பதவியா உள்ளிட்ட இடங்களில் குறித்த சிகிச்சை நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

அத்துடன் பொலனறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக வைத்தியசாலையின் தரம் மற்றும் நிர்மாணப்பணிகள் என்பவற்றை ஆராய்வதற்கென சீன அரசாங்கம் தற்போது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளளது. குறித்த அறிக்கை கிடைத்தவுடன் பொலனறுவையில் வைத்தியசாலை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அம்பாந்தோட்டை, அநுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள சிறுநீரக வைத்தியசாலைகளை மேம்படுத்தவும, பொரளையில் அமைந்துள்ள சிறுநீரக பரிசோதனை நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும்  சுகாதார அமைச்சு  திட்டமிட்டுள்ளது என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.