அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள  பண்ணை வீடு ஒன்றிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை லொஸ் ஏஞ்சல்ஸ்  பொலிஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.

லொஸ் ஏஞ்சல்ஸின் ஹோம்பி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஓர் உயர் ரக பண்ணை வீட்டில் 1000க்கும் மேற்பட்ட ஆபத்தான ஆயுதங்களை பொலிஸார் நேற்று மாலை பறிமுதல் செய்தனர். அவர்களுடன் மதுபானம், புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் நிபுணர் குழுவும் சென்றதாக லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹோம்பி ஹில்ஸ் பகுதியில் உயர் ரக பண்ணை வீட்டின் முன் பகுதியில் கார் வந்து செல்லும் அகன்ற முற்றத்திலேயே 1000க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததையும் கைத்துப்பாக்கியிலிருந்து ரைபிள் வரை பல்வேறு வகையான ஆயுதங்கள் அங்கே இருந்ததையும் வான்வழி கெமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் நிபுணர் குழு அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு முன், 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட  ஒரு தேடுதலிலும் லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் 1200 துப்பாக்கிகளும் ஏழு டொன் வெடிமருந்துகளையும் கைப்பற்றினர். அத்தோடு  2,30,000 அமெரிக்க டொலரும் பறிமுதல் செய்யப்பட்டது. 

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அவ்வீட்டின் உரிமையாளர் ஒரு வாகனத்தின் வெளியே இறந்து கிடந்தது இயற்கையான மரணம் என்று கூறப்பட்டதையடுத்து  விசாரணை மேற்கொள்ள வீட்டுக்குள் சென்றபோது இவை கண்டுபிடிக்கப்பட்டதாக லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.