ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு செயற்கை கால் பொருத்தப்பட்ட நிலையில் நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் இடம்பெற்று வரும் நிலையில். அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகிறது.

இதில் கடந்த சில ஆண்டுகளாக தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் பகுதிகளிலும் தலிபான்கள் தாக்குதலை தொடர்ந்து நடந்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவங்களால் பலர் கை, கால்களை இழந்துள்ளனர்.

இதில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் சிறுவன் ஒருவன் எட்டு மாதக் குழந்தையாக இருக்கும்போது ஒரு காலை இழந்தார். இந்நிலையில் ஐந்து வயது ஆகிய நிலையில் அந்தச் சிறுவனுக்கு வைத்தியசாலையில் செயற்கை கால் பொருத்தப்பட்டது.

இதில் மகிழ்ச்சியடைந்த அந்தச் சிறுவன் வைத்தியசாலையில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.