செவித்திறன் குறைந்த இரண்டு மாணவர்கள், ஸ்கேட்டிங் மூலம் 52 கிலோ மீற்றர்  தூரம் கொடைக்கானல் மலையேறி சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தின் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த செவித் திறன் பாதித்த மாணவர்கள் ராகுல்கண்ணன் (15) மற்றும் கமலேஷ் (10). இவர்களில், ராகுல்கண்ணன் 10ம் வகுப்பும், கமலேஷ் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, மதுரையில் உள்ள 'யூத் ஸ்கேட்டிங் அகாடமி'யில் கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து ராகுல்கண்ணன், ஒரு நிமிடத்தில் 3 அடி தடை தாண்டும் போட்டி, 54 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டது, 40 நிமிட ஓட்டப் போட்டியை 20 நிமிடங்களில் நிறைவு செய்தது என, ஸ்கேட்டிங்கில் பல சாதனைகள் புரிந்துள்ளார்.

இந்நிலையில், கொடைக்கானலில் தற்போது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக ராகுல்கண்ணன், கமலேஷ் ஆகியோர் நேற்று (8ம் தேதி) காலை, காட்ரோட்டில் இருந்து 52 கி.மீ தொலைவில் உள்ள கொடைக்கானலுக்கு, ஸ்கேட்டிங் மூலம் 6 மணி நேரத்தில் மலையேறி வந்தனர்.

இதுகுறித்து பயிற்சியாளர் ரத்தினகுமார் கூறியதாவது; “மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஸ்கேட்டிங் மூலம் மலையேற்ற பயிற்சியளிக்கப்பட்டது. 

சிறுவர்களின் உத்வேகம் ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் உள்ளது. இவர்களது ஸ்கேட்டிங் திறன் எதிர்காலத்தில் சாதனைகள் பல புரியும் வகையில் உள்ளது” என்றார்.